அண்ணா பல்க்கலைக்கழக துணைவேந்தர் மீதான தாக்குதல்-ஸ்டாலினுக்கு சிபிஎம் கண்டனம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தாக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ. மலைராஜா மீது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் புகார் கூறியும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சி.பி.எம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது துணைவேந்தர் டாக்டர் எஸ்.காளியப்பன் அறைக்குள் திருநெல்வேலி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மலைராஜா அத்து மீறி நுழைந்து துணைவேந்தரை தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற உடற்கல்வி இயக்குநர் தேவதாசையும் அவர் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
விழாவின் போது தனக்கு பட்டமளிப்பு விழா அங்கி கிடைக்காததால் மலைராஜா தனது ஆதரவாளர்களுடன் துணை வேந்தர் மற்றும் உடற்கல்வி இயக்குநரை தாக்கியுள்ளார்.
இது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் துணைவேந்தர் புகார் செய்தும் மலைராஜா மீது இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணை முதல்வரின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
எனவே, துணை வேந்தரை தாக்கிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மலைராஜாவை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications