'5 வருட ஆட்சியில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதோ மர்ம காய்ச்சல் பரவியிருப்பதாக ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது போல அங்கே எந்தவிதமான மர்ம காய்ச்சலும் இல்லை. எதையாவது அன்றாடம் அறிக்கை என்ற பெயரால் எழுதி, பத்திரிகைகளிலே வெளியிடச் செய்கிறார்.
பருவநிலை மாற்றத்தால் மக்களுக்குச் சாதாரண காய்ச்சல் அவ்வப்போது ஏற்படுகிறது. அதனை உடனுக்குடன் குணப்படுத்த சிகிச்சைப் பணி துரிதமாக நடைபெறுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சாதாரணக் காய்ச்சல் கண்டவர்களுக்குக் கூட உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் என சந்தேகித்தால் அதற்கானப் பரிசோதனையும் செய்யப்படுகிறது.
நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோய்களுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே வந்த பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
நோயாளிகள் இருபது நாட்கள் வரை காத்திருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தெரிவித் திருப்பது தவறான தகவலாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது.
கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுபவர்களுக்கு- பக்கத்தில் திருநெல்வேலி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கூட வாங்கப்படவில்லை. இவர்தான் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. மருத்துவ வசதி இல்லை என்று இன்று குறை சொல்லுகிறார்.
அதிமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் கன்னியா குமரி மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியைத் தொடங்க ஒரு அரசாணையை 23.01.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியில் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு தான் தொடர் நடவடிக்கை எடுத்து, இக்கல்லூரியில் 100 உள்நோயாளிகள் கொண்ட படுக்கை வசதியுடன் அனைத்து ரத்தப் பரிசோதனைக்கூடம், பஞ்சகர்மா மருத்துவப் பிரிவு வசதிகள் உள்ளன.
மேலும் இம்மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குச் சிறப்பான வகையில் அனைத்துவித ஆயுர்வேத சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்றெல்லாம் ஜெயலலிதா தனது அறிக்கையிலே புலம்பியிருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் பணியாளர்கள் எல்லா மருத்துவ மனையிலும் நிரப்பப் பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். இதுவரை 6,500க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 11,941 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அவசர ஆம்புலன்ஸ் 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இளம் சிறார் பாதுகாப்புத் திட்டம், பள்ளிச்சிறார் கண்ணொளி பாதுகாப்புத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தி இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
இதனை பொறுக்க முடியாமல் ஜெயலலிதா அறிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதற்கு குமரி மாவட்ட மக்களே நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications