வெற்றிக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது-ஜெ.

சென்னை வேலப்பன்சாவடியில் 20 அதிமுக குடும்பத்து ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதை ஜெயலலிதா தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
வெகு காலத்திற்கு முன்பு படித்த ஓ. ஹென்றி என்னும் பிரசித்தி பெற்ற எழுத்தாளரின் கிறிஸ்துமஸ் கிப்ட்' என்ற சிறுகதையை இங்கே உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஒரு சின்ன கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் கருத்தொற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். நீண்ட கூந்தல் கொண்ட தன் மனைவிக்கு அழகான ஹேர் கிளிப் ஒன்று வாங்கி அதனை கிறிஸ்துமஸ் அன்று பரிசளித்து தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று முடிவு செய்தான் கணவன்.
அதே போல, அவனது மனைவியும் அதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன் அன்புக் கணவனுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து மகிழ்வித்து தான் கொண்டிருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள் மனைவி. என்ன பரிசளிப்பது என்று நினைத்த போது, தன் கணவன் ஆசையாய் அணிந்து கொள்ளும் கைக் கடிகாரத்தின் சங்கிலி அறுந்து போனதால் தன் கணவனுக்கு மிகவும் பிடித்த அந்த கடிகாரம் பயன்படுத்தாமலே பெட்டிக்குள் கிடப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
எப்படியாவது கடிகாரத்திற்கான கை செயின் ஒன்றை வாங்கி வந்து கிறிஸ்துமஸ் பரிசளித்து தன் கணவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்று அவளும் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
இந்தச் சூழ்நிலையில், அவர்களின் குடும்ப பொருளாதார நிலை மிக மோசமான காலக்கட்டத்தில் இருந்தது. உச்சகட்ட வறுமை அவர்களை சூழ்ந்திருந்தது. ஒரு வழியாய் கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அந்தக் கணவனும் மனைவியும் தங்கள் மனதுக்குள் நினைத்து வைத்திருந்த பரிசை எப்படியாவது வாங்கி பரிசளிக்க வேண்டும், என்ற உறுதியில் இருந்தனர். பொழுது விடிந்தது. ஊரெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது.
அந்த அன்புக் கணவன் தன் மனைவியை அழைத்தவாறே ஓடி வந்து உனக்காக ஒரு பரிசு வாங்கி வந்திருக்கிறேன், உன்னுடைய நீண்ட கூந்தலை அழகுபடுத்தவும் ஒழுங்கு படுத்தவும் உதவும் கிளிப் இது என்று சொல்லியவாறே தான் வாங்கி வந்த ஹேர் கிளிப்பை தன் மனைவியிடம் கொடுத்தான். அவளோ, மகிழ்ச்சியைக் காட்டாதவளாய் அதிர்ச்சியடைந்தவாறே தன் கணவன் கொடுத்த ஹேர் கிளிப்பை வாங்கி அருகிலிருந்த மேஜையில் வைத்தாள்.
கணவனுக்கு தன் மனைவியின் செய்கை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. "நான் ஆசையோடு வாங்கி வந்த ஹேர் க்ளிப் உனக்கு பிடிக்கவில்லையா?" என்று கேட்டான். "இல்லை, மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அது இப்போது எனக்கு பயன்படாது. உங்கள் கைக் கடிகாரத்திற்கு செயின் வாங்க வேண்டும் என்று எனது கூந்தலை நேற்றே வெட்டி செயற்கை முடி செய்பவரிடம், சவுரி செய்பவரிடம் விற்றுவிட்டேன். இதோ பாருங்கள் உங்களுக்கு நான் வாங்கி வந்திருக்கும் கடிகாரத்துக்கான கை செயின்" என்று மனைவி அதனை நீட்டிய போது, கணவனோ, "ஐயோ நான் என் கடிகாரத்தை விற்றுத்தானே உன் கூந்தலுக்கு கிளிப் வாங்கி வந்தேன்! இப்போது நான் வாங்கி வந்த கிளிப்பை நீ சூடிக்கொள்ள உன்னிடம் கூந்தலும் இல்லை; நீ அன்போடு எனக்காக வாங்கி வந்திருக்கும் கடிகார செயினை பொருத்திக் கொள்ள என்னிடம் கடிகாரமும் இல்லை. ஆனால், நம் இருவரிடமும் இம்மியளவும் குன்றாத அன்பு மட்டும் நிறைந்தே இருக்கிறது" என்று கணவன் சொன்ன போது, இருவரின் கண்களிலும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் ஊற்றெடுத்தது.
இந்த சிறுகதையில் வந்து போன கதா பாத்திரங்களைப் போல, இந்த மணமக்களும் ஒருவருக்காக ஒருவர் புரிதலோடும், பொறுமையோடும், அன்போடும், எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
இந்த மணவிழாவில் அதிமுகவினருக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றிகளைக் குவிக்கும் நேரம் இந்த விநாடி முதல் தொடங்கி விட்டது. விஞ்ஞானிகளின் பாணியில் சொல்வதென்றால் கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது.
பணத்தால் நம் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கலாம். நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் வருடம் தவமிருந்தானாம். ஒரே ஒரு நிமிடம் அயர்ந்து கண்ணை மூடி திறந்திருக்கிறான். அந்த இடைவெளியில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடிக் கொண்டுவிட்டதாம். எனவே, இந்த விநாடி தொடங்கி அயராமல் விழிப்போடு களப்பணியாற்ற அதிமுகவினர் ஆயத்தமாகிவிட வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications