லோக்சபாவில் அணு விபத்து இழப்பீடு மசோதா ஒரு வழியாக நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

Nuclear Reactor
டெல்லி: லோக்சபாவில் அணு விபத்து இழப்பீடு மசோதா நேற்று நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அணு விபத்து இழப்பீடு மசோதா தொடர்பாக பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் ஆட்சேபனை எழுப்பி வந்தன. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களுக்கு அவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டது.

இதையடுத்து மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மசோதாவில் 18 திருத்தங்களை மேற்கொண்டது. இதையடுத்து நேற்று இந்த மசோதா ஒரு வழியாக லோக்சபாவில் நிறைவேறியது.

முக்கியத் திருத்தமாக, அணு விபத்து ஏற்பட்டால், விபத்து இழப்பீடாக ரூ. 500 கோடியாக தரப்பட வேண்டும் என முன்பு மசோதாவில் குறப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அது ரூ. 1500 கோடியாக அதிகரிக்கப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்த அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். அப்போதுதான் பல்வேறு நாடுகளுடன் நம்மால் அணு சக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.

பின்னர் நான்கு மணி நேரம் கடும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது ரூ. 1500 கோடி இழப்பீடு என்பதை ரூ. 10,000 கோடியாக மாற்ற வேண்டும் என சிபிஎம் கோரிக்கை வைத்தது. ஆனால் இதை அரசு நிராகரித்து விட்டது.

கடும் சூடாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,

இந்தியாவின் தேசிய நலன் எந்தவகையிலும் விட்டுக் கொடுக்கப்படவில்லை. அணுவிபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவுக்கு சாதகமானது எனும் கருத்து தவறானது. அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் இது உருவாக்கப்படவில்லை.

அணுசக்தி விவகாரத்தில் இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. நான் அமெரிக்காவின் நலனுக்காக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல. இந்த விஷயத்தில் நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுவது பொய்யான விஷயம்.

அணு தீண்டாமையிலிருந்து தற்போது இந்தியா முழுமையாக விலகி வந்துள்ளது. அதற்கு இந்த மசோதா முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம் உலகநாடுகளுடன் இந்தியா மிகவும் பெரிய அளவில் அணு வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்றார்.

அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு மசோதா விடப்பட்டது. அதில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவி்த்ததால், மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+