நடுக்கடலில் கன்னியாகுமரி-கேரள மீனவர்கள் மோதல்-28 பேர் சிறை பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் கேரள விசைப் படகு மீனவர்களிடையே நடுக் கடலில் கடும் மோதல் மூண்டது. இதில் 28 மீனவர்கள் சிறை பிடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சேர்ந்தவர் பாவுல். இவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம் உள்பட 9 பேர் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அதேபோல சின்ன முட்டத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேர் நேற்று காலையில் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த 2 விசைப்படகில் இருந்த 19 பேரும் முட்டம் கடல் பகுதிக்கு தெற்கே 15 நாட்டிக்கல் கடல் மைல் தொலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். கடலில் இவர்கள் வலைகள் விரித்து வைத்து இருந்தனர்.

அப்போது கேரள மீனவர்கள் 10 விசைப்படகில் வேகமாக வந்தனர். அந்த 10 படகுகளும் கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் விரித்து வைத்து இருந்த வலைகளை அறுத்து எறிந்து சென்றது. உடனே சின்னமுட்டம் பகுதி படகில் இருந்த 19 மீனவர்களும், கேரள படகில் வந்த மீனவர்களை கண்டித்தனர்.

அப்போது கேரள மீனவர்கள், இது நாங்கள் மீன் பிடிக்கும் பகுதி, நீங்கள் இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று கூறினார்கள். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதலாகியது. அப்போது 10 படகில் வந்த கேரள மீனவர்கள், சின்னமுட்டம் கோவளம் பாவுல் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் சிறைப்பிடித்து குளச்சல் கடல் பகுதியில் கொண்டு வைத்துக் கொண்டனர்.

பிந்னர் இதே கேரள மீனவர்கள் பொன்னையன் படகை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அந்த படகில் இருந்த 10 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இந்த படகும், 10 மீனவர்களும் முட்டம் அருகே நடுக்கடலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அனைவரும் சின்ன முட்டத்தில் திரண்டனர். அவர்கள் ஒரு விசைப்படகில் நடுக்கடலுக்குள் சென்றனர்.

அப்போது அங்கு கேரளக்காரர்களை பங்குதாரராக கொண்ட விசைப்படகு ஒன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த படகில் 9 பேர் இருந்தனர். அந்த 9 பேரையும் சின்னமுட்டம் மீனவர் சிறை பிடித்து சின்னமுட்டம் கடல் பகுதிக்கு கொண்டு வந்தனர். இந்த படகை ஓட்டியவர் குளச்சல் மாதாகாலனி ஜெரின்(38) ஆவார். அவரும் சிறை பிடிக்கப்பட்டார்.

இச்சம்பவங்களால் சின்னமுட்டம், குளச்சல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி சக்திவேல், சின்னமுட்டம் மீன்துறை உதவி இயக்குனர் ருக்மணி, மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் நாகராஜன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை, சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் ஆகியோர் சின்னமுட்டம் விரைந்தனர்.

அங்கு மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபோல் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் குளச்சலுக்கு விரைந்து சென்று விசாரித்து வருகிறார்.

3 இடங்களில் மொத்தம் 28 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கடலோர மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னமுட்டம் துறைமுகத்தில் பரபரப்பு நிலவுகிறது. இங்கிருந்து மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்காமல் பாதியில் கரை திரும்பின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+