அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 1.2% அதிகரிப்பு
டெல்லி: மத்திய, மாநில அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் தேர்வு செய்யப்படுவது 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மையினர் நல விவகாரத் துறை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கடந்த 2006-07ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு சிறுபான்மையினர் வெறும் 6.7 சதவீதம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்றும்,
2009-10ம் ஆண்டில் அது கொஞ்சம் உயர்ந்து 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினரும் அடங்குவர்.
குழந்தை நீதி சட்டம்:
இக் கூட்டத்தில் குழந்தைகள் நீதி சட்டத்தில் இருந்த பாரபட்சம் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) தொழுநோய், காசநோய் மற்றும் பாலியல் பாதிப்பு நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வகை செய்யப்படும்.
ஜாதிவாரி சென்ஸஸ்-பிரதமருடன் எம்.பிக்கள் சந்திப்பு:
இந் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும் நேரில் சந்தித்து வற்புறுத்தினர்.
பிரதமரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும். இதற்கான உத்தரவை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பில், இதர பிற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இதை அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோரின் நலனை காக்க ஏற்கனவே நாடாளுமன்றக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதைர் ரோஸ பிற்பட்டோர் பிரிவினரை பாதுகாக்கவும் கமிட்டி அமைக்க வேண்டும்.
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இதர பிற்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதை பல கல்வி நிறுவனங்கள் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த இடங்களையும், பொதுப் பிரிவில் சேர்த்து மாணவர்களை சேர்க்கின்றனர்.
எனவே இதைக் கண்காணிக்க கமிட்டி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இருக்கும் பிற்பட்டோர் வகுப்புக்கான தேசிய கமிஷன், இதர பிற்பட்டோர் பிரச்சனையை சரியாக கவனிப்பது இல்லை. எனவே இதர பிற்பட்டோரின் குறைகளை கேட்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட மன்மோகன் சிங், இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications