யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சியில் நிரூபமா ராவ் ஆய்வு

4 நாள் பயணமாக நிரூபமா ராவ் நேற்று இலங்கை போய்ச் சேர்ந்தார். இன்று அவர் முதலில் வவுனியா சென்றார். பின்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கும் சென்றார்.
அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைளை கேட்டறிந்தார். நாளை அவர் முல்லைத்தீவுக்கும், திரிகோணமலைக்கும் செல்லவுள்ளார்.
திரிகோணமலை பயணத்தின்போது பிள்ளையானை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்வது, மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது, மறு சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விரைந்து செய்து வருவதாக இலங்கை கூறி வருகிறது. ஆனால் இதில் பெரும் சுணக்கம் காணப்படுவதாக ஈழத் தமிழ் கட்சிகள், அமைப்புகள் கூறி வருகின்றன. இதில் உண்மை நிலையை கண்டறிவதற்காகவும், விரைவில் இலங்கை வரவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகவும் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாளை நிரூபமா ராவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என அக்கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு திட்டம் நிரூபமாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நிரூபமா தமிழர் பிரதிநிதிகளை சந்திப்பாரா, மாட்டாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications