மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்-திட்டமிட்டபடி மதுரை ஆர்ப்பாட்டம்: ஜெ.

மதுரையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு சமீபத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரைக்கு வரக் கூடாது, அண்ணனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. மீறி வந்தால் குண்டு வைத்துக் கொடூரமாகக் கொல்வோம் என அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இக்கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை.
இந்தநிலையில் இதை தெளிவுபடுத்தியுள்ளார் ஜெயலலிதா. கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போயுள்ள ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் மில்லர்-அனுசுயா மேரி ஆகியோரது மகன் அருண்சக்கரவர்த்தி, மதுரை சேகர்சுப்பிரமணியம்-எஸ்.கலாவதி ஆகியோரின் மகள் பிரீத்தி இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடார் மகாஜன சங்க கல்யாண மண்டபத்தில் நேற்று மதியம் நடந்தது. சசிகலாவுடன் அங்கு வந்த ஜெயலலிதாவுக்கு
செண்டை மேளம் முழங்க, நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மணமக்களை ஆசிர்வதித்து, அன்பளிப்பு வழங்கி வாழ்த்திய பின்னர் ஜெயலலிதா கிளம்பிச் சென்றார்.
முன்னதாக கூடலூர் வரும் வழியில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதற்கு நான் பயப்பட மாட்டேன். திட்டமிட்டபடி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மக்கள் விரும்பும் கூட்டணியை அமைக்கும். அதற்கு இன்னும் காலம் உள்ளது. யாருடன் கூட்டணி என்பது போக, போக தெரியும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றார்.
தொகுதிக்கு 100 பாதுகாப்புப் படையினர்:
இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு அதிமுக சார்பில் பாதுகாப்பு அளிக்க சட்டசபை தொகுதி ஒன்றுக்கு தலா 100 பேர் என ஆட்களைத் தேர்வு செய்ய ஜெயலலிதா பேரவை தீர்மானித்துள்ளது.
அனைத்து மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேரவை மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆணையின்படி தகுதியான நபர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி அமைத்து சிறப்புடன் களப்பணியாற்றுவது.
ஜெயலலிதாவின் காவல் அரணாக செயல்படும் வகையில் பேரவை சார்பில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 பேர் வீதம் சீருடைப்படைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வது.
மண்எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரவை சார்பில் கிளைக்கழகம், ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகரங்களில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்வது.
இலங்கைத்தமிழர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, காவிரி நதிநீர் உரிமைப்பிரச்சினை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் பிரச்சினை, மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நுழைவுத்தேர்வு போன்ற தமிழகத்தின் உரிமைகளை தமிழக அரசு பெறாமல் இருப்பதை பொதுக்கூட்டம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் விளக்கி மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவது.
ஒளிமயமான தமிழகத்தை உருவாக்கிட, பேரவையினர் கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டு, ஜெயலலிதா தலைமையில், மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம் என வீரசபதம் ஏற்கிறோம் என்று தீர்மானங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications