கடத்திய 4 பேரில் 2 போலீஸ்காரர்களை கொன்றனரா நக்ஸல்கள்?
பாட்னா: பிகாரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 போலீசாரில் சப்-இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை கொன்றுவிட்டதாக நக்ஸல்கள் அறிவித்துள்ளனர். ஆனால், கடத்தப்பட்ட இன்னொரு உதவி சப்-இன்ஸ்பெக்டரான லூகாஸ் டெட் என்பவரின் உடல் கிடைத்துள்ளது. இதனால் இருவருமே கொல்லப்பட்டனரா அல்லது லூகாஸ் மட்டுமே கொல்லப்பட்டரா என்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லக்கிசராய் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே கடும துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில், 8 போலீசார் கொல்லப்பட்டனர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார், அபய் பிரசாத் யாதவ், பிகார் ராணுவ போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே, பிகார் ராணுவப் பிரிவின் போலீஸ்காரர் முகம்மத் இஷான் ஆகியோர் கடத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களை மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.
சிறையில் இருக்கும் 8 நக்ஸல் தலைவர்களை விடுதலை செய்தால் தான், 4 போலீஸ் அதிகாரிகளையும் விடுவிப்போம் என்று நிபந்தனை விதித்தனர். இந்த கெடு நேற்று காலை 10 மணிக்கு முடிவடைந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை கொலை செய்துவிட்டதாக நக்ஸல்கள் அறிவித்தனர்.
இத்தகவலை மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் அவினாஷ், தனியார் செய்தி சேனல்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் கூறுகையி்ல், நாங்கள் விதித்த கெடு முடிந்தும், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றப்படவில்லை.
எனவே, ஜன அதாலத்' எனப்படும் கங்காரு நீதிமன்றத்தை கூட்டினோம். அதில், சப்-இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் கொல்லப்பட்டார். அவரது உடல், இரவில் ஒப்படைக்கப்படும். பிகார் அரசுதான் எங்களை இந்த முடிவுக்கு தள்ளியது என்றார்.
மேலும், இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணிக்குள் எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், எஞ்சியுள்ள 3 போலீஸ் அதிகாரிகளையும் கொலை செய்வோம் என்று அவினாஷ் மிரட்டல் விடுத்தார்.
இந் நிலையில் பிகார் ராணுவ போலீஸ் பிரிவில் ஹவில்தாராக பணியாற்றிய லூகாஸ் டெட்டின் உடலை சிம்ராதாரி- ஸ்ரீங்கிரிஷி அணைப் பகுதியில் கிடந்தது.
ஆனால், அபய் பிரசாத்தின் உடல் கிடைக்கவில்லை.
இந் நிலையில் மாநில அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை டெல்லியில் கூறியுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் அபய் பிரசாத்தை மாவோயிஸ்டுகள் கொலை செய்துவிட்டதாக அறிவித்ததையடு்த்து முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் முன் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி ரஜினி போராட்டம் நடத்தினர். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந் நிலையில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு வரும் மாவோயிஸ்டுகள் பத்திரமாக வந்து செல்ல வசதி செய்து தரப்படும். அவர்களுக்கு போக்குவரத்து செலவும் அளிக்கப்படும். எங்களிடம் பிடிபடும் மாவோயிஸ்டுகளை நல்ல முறையில் நடத்துவதுபோல, பிணைக் கைதிகளை மாவோயிஸ்டுகள் நன்றாக நடத்த வேண்டும் என்றார்.
லாலு கட்சி கோரிக்கை:
இந் நிலையில் கடத்தி செல்லப்பட்ட போலீசாரை மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென, மாவோயிஸ்டுகளுக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், பிணைக் கைதிகளாக இருக்கும் போலீசார் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்களி்ன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications