3வது அணிக்கு தலைமை ஏற்க பாமக தயார்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்குப் பதிலாக மூன்றாவது அணிக்கு தலைமையேற்க பாமக தயாராக உள்ளதாக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தென் சென்னை மாவட்ட பாமக செயற்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

தமிழகம் எல்லா வகையிலும் மிகச் சிறந்த மாநிலமாக முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், இன்று சாராயம் குடிப்பதிலும், சினிமா தொழிலிலும்தான் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ. 351 என்று தமிழக அரசின் திட்டக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு குடும்பத்தின் தினசரி வருமானம் சுமார் ரூ.12 மட்டுமே. ஆக, இங்கு வறுமை ஒழிக்கப்படவில்லை.

எல்லோருக்கும் கல்வியை கொடுத்தால், வேலை வாய்ப்பை கொடுத்தால் அது தான் வளர்ச்சி, அப்போது மக்களே வாங்கும் சக்தியை பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு குடும்பம் ஏழ்மையில் இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. உணவு பொருட்கள் அழுகிப்போவதை, எலிகள் சாப்பிடுவதை ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், பல்பொடி கொடுப்பதுதான் பொருளாதார முன்னேற்றமா?. டி.வி. பெட்டி ரொம்ப, ரொம்ப அவசியமான ஒன்றா?, அது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லையா?.

டி.வி. பெட்டி, கேஸ் சிலிண்டர் இவைகளை எல்லாம் மக்களே வாங்க வேண்டும். இதை வாங்க முடியாத மக்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

ஆனால் தேர்தலை மனதில் வைத்து, வாக்கு வங்கியை மனதில் வைத்து இலவச பொருட்களை கொடுக்கிறார்கள். கல்வியை கொடுத்து வேலை வாய்ப்பை கொடுத்தால் அவர்களே எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வார்கள்.

மத்திய அரசும் மாநில அரசும் விவசாயத்திற்காக எதுவும் செய்யவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள்?. வேலை கேட்டால் டாஸ்மாக் கடையில் வேலை இருக்கிறது என்று அழைக்கிறார்கள்.

நாங்கள் படி படி என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் குடி குடி என்று சொல்கிறார்கள். டாஸ்மாக் விற்பனை ரூ.15,000 கோடியை எட்ட வேண்டும் என்று நிர்ணயம் செய்கிறார்கள். இதுவா வளர்ச்சி?.

தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை, தமிழ்நாடு முன்னேறவில்லை. தமிழ் ஆட்சி மொழியாகி 56 வருடங்கள் ஆகிறது. கோட்டையில் ஆட்சி மொழி இருக்கிறதா?.

லாட்டரிக்கு தடை சட்டம் உள்ளது. ஆனால் இங்கே ஒரு நாளைக்கு ரூ.40 கோடிக்கு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்கிறார்களாம். கஞ்சா எங்கே இல்லாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நல்ல திட்டங்களை நிறைவேற்றும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நல்ல கொள்கைகளையுடைய, நல்ல கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மக்கள் விரும்பும் அந்த மாற்றத்தைக் கொடுக்க பாமக தயாராக உள்ளது என்றார்.

கேள்வி:கச்சத் தீவை திரும்ப பெறமுடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளாரே?

ராமதாஸ்: அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி.

கேள்வி: பாமக தலைமையில் தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

ராமதாஸ்: மக்கள் மாற்றத்தை விரும்பினால் நாங்கள் தயாராக இருக்கிறோம். மாற்று அணிக்கு தலைமை ஏற்கவும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: விஜயகாந்த் மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்கிறார். நீங்களும் மக்கள் விரும்பினால் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறுகிறீர்கள். இருவரும் ஒன்றாக சேருவீர்களா?

ராமதாஸ்: ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். ஒரு வசனம் இருக்கிறது, அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது. நிரந்தர பகைவர்களும் கிடையாது. எனவே அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி: 3 மாதங்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி பேசினீர்கள். இப்போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதற்கு என்ன காரணம்?

ராமதாஸ்: பொதுவாக எதிர்க்கட்சிகள் யாரை விமர்சனம் செய்வார்கள்?. ஆளும் கட்சியைத்தான் விமர்சனம் செய்வார்கள். ஆளும் கட்சி குறைகளைத்தான் சுட்டிக் காட்டுவார்கள். எதிர்க் கட்சிகள் சொல்லும் குறைகளை கேட்டு திருத்திக் கொள்வதுதான் ஆளும் கட்சி கடமை.

கேள்வி: திமுக கூட்டணியில் பாமக சேர வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளாரே?

ராமதாஸ்: அவர் பாமக நலன் விரும்பி. எனவே அவர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார். அவரது நல்ல மனதை வரவேற்கிறேன்.

கேள்வி: திமுகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

ராமதாஸ்: இப்போது அது பற்றி எந்த முடிவும் எடு்ககவில்லை.

கேள்வி: திமுக அரசுக்கு முன்பு மார்க் போட்டீர்களே. இப்போதும் போடுவீர்களா?

ராமதாஸ்: திமுக ஆட்சிக்கு இப்போது நாங்கள் மார்க் போட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், மக்கள் மார்க் போட வேண்டிய நேரம் (தேர்தல்) நெருங்கி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+