For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவி

Google Oneindia Tamil News

Jothi
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கு, அவரது வகுப்பில் படித்து வரும் ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலி, கிண்டல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது சென்னை நகருக்கு தங்களது பிள்ளைகளைப் படிக்க அனுப்பி வைத்துள்ள அப்பாவி கிராமத்து பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஜோதி (18). படிப்பில் சிறப்பிடம் பெற்றவரான ஜோதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ இசிஇ கிடைத்தது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். நேற்று முன்தினம் முள்ளுக்குறிச்சிக்கு சென்றுள்ளார். நேற்று அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை முடிவுக்கு அவருடன் படித்து வரும் சக மாணவர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர் ஜோதி. இதனால் அவரை ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் கேலி செய்துள்ளனர். ஜோதிக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மூத்த சகோதரன் தீபக்கிடம், தன்னுடன் பயிலும் மாணவர்கள் கேலி செய்வதாகவும், தான் திரும்பி சென்னைக்கு போகப் போவதில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறி்த்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகம் விசாரணை:

இந்த சம்பவம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அங்கு ஜோதியின் தோழிகளை விசாரித்து அவரை யார் யார் ராகிங் செய்தார்கள் என்பதை கண்டறியவுள்ளனர். பின்னர் மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

ஜோதியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவுள்ளனர். ராகிங் செய்வது பெருங்குற்றம். அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆயினும் இந்த சம்பவம் அந்த வளாகத்திலேயே நடந்துள்ளது.

மாணவி ஜோதி பள்ளிப் பருவம் முதல் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே இரண்டாவதாக வந்த அவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1105 மதிப்பெண்கள் எடுத்தார்.

இதையடுத்து அவர் கடந்த மாதம் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். படிக்கச் சென்ற ஒரே மாதத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் சொந்த ஊரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X