மதத்தை இழிவுபடுத்தியதாக கை வெட்டப்பட்ட பேராசிரியர் டிஸ்மிஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி கை வெட்டப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் நேற்று நிரந்தரப் பணி நீக்கம் செய்தது.
கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழாவில் நியூமேன் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் மலையாளத் துறை பேராசிரியராக ஜோசப் பணியாற்றி வந்தார்.
சில மாதங்களுக்கு முன் அங்கு நடந்த தேர்வில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் கேள்வி இடம் பெற்றிருந்ததாக கூறி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையி்ல் கடந்த 2 மாதங்களுக்கு முன் சர்சுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிய அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 51 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் தற்போது தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஜோசப்பை கல்லுரி நிர்வாகம் நேற்று நிரந்தரப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகிகள் கூறும்போது, ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியது.


Click it and Unblock the Notifications
