ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க மீண்டும் கைகோர்த்த பாஜக-சிபுசோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜத தலைமையில் புதிய அரசு அமைகிறது. தனது ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ காரணமாக இருந்து சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனேயே மீண்டும் கூட்டணி அமைக்கிறது பாஜக.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிபு சோரன் முதல்வரானார்.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவாக சிபு சோரன் கட்சி வாக்களித்தது.
இதையடுத்து சிபு சோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. சோரன் எதிர்பார்த்தபடி அவருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சியும் மறுத்துவிட்டதால் சட்டசபை கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாஜகவிடம் சரண்டர் ஆனார் சோரன். பாஜகவே அரசை அமைக்கலாம் என்றும், தாங்கள் ஆதரவு தரத் தயார் என்றும் சிபு சோரனும் அவரது மகன் ஹேமந்தும் பாஜக தலைவர் கட்காரியிடம் கடிதம் தந்தனர்.
இதை ஏற்று பாஜக ஆட்சியமைக்க முயன்றபோது, திடீரென சோரன் புதிய நிபந்தனை விதித்தார். சட்டசபைக்கு மீதமுள்ள 56 மாதங்களைப் பிரித்து முதல் 28 மாதம் பாஜகவும் மி்ச்சமுள்ள 28 மாதங்கள் தானும் ஆட்சிக்கு தலைமை தாங்கலாம் என்றார்.
இதையும் பாஜக ஏற்றுக் கொண்டது. ஆனால், மே 25ம் தேதி சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது என்றும், பாஜக மாநிலத் தலைவரான அர்ஜூன் முண்டா முதல்வராவது என்றும் முடிவானது.
ஆனால், உறுதியளித்தபடி சோரன் பதவி விலகவில்லை. இதையடுத்து அவருக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனால் சட்டசபை முடக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டது. சோரனும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்து சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு கவர்னர் எம்.ஓ.எச். பரூக் மேற்பார்வையில் நிர்வாகம் நடந்து வருகிறது.
இந் நிலையில் மீண்டும் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க சிபு சோரன் ஆதரவு தர முன் வந்துள்ளார். பாஜக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கத் தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.
சோரனின் ஆதரவை ஏற்றுக் கொள்வதாக பாஜகவும் அறிவித்தது. இதையடுத்து இன்று நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அர்ஜூன் முண்டா சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக்கை பாஜக குழுவினர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளனர். இதன்மூலம் அர்ஜூன் முண்டா முதல்வராகிறார்.
ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தவிர அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனும் ஆதரவு தருகிறது.












Click it and Unblock the Notifications