பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசு-டீசல் 10 காசு உயர்வு
டெல்லி: பங்க் உரிமையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதற்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசும், டீசல் விலையை 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.
இந் நிலையில் பெட்ரோல் பங்க் டீலர்கள் அதிக கமிஷன் கோரியதால் இந்த விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 முதல் 12 காசு வரையும், டீசல் விலை லிட்டருக்கு 9 முதல் 10 காசு வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ரூ. 55.92 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 56.02 காசாக உயர்ந்துள்ளது.
இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 9 காசு உயர்ந்துள்ளது. இதனால், ரூ. 40.07 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, ரூ. 40.16 ஆக உயர்ந்தள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
முன்னதாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.10ம், டீசல் விலையை 60 பைசாவும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிகார் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து சிறிய அளவிலேயே விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிக கமிஷன் கோரியதால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவை பொது மக்கள் தலையிலேயே கட்டியுள்ள எண்ணெய் நிறுவனங்கள். இதனால் தான இந்த விலை உயர்வு அமலாகியுள்ளது.
இந்தியா முழுவதும் 38,700 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த பங்க்குகளுக்கு விற்பனை விலையில் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்கள் கமிஷனான வழங்குகின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.08ம், ஒரு லிட்டர் டீசலுக்கு 67 பைசாவும் கமிஷனாக வழங்கப்படுகிறது. இந்தக் கமிஷன் போதாது என்று பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியது.
பங்க் பராமரிப்பு செலவு, ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம் போன்றவை அதிகமாகிவிட்டதால் 5 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.
இதை ஏற்காவிட்டால் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.
பங்க் உரிமையாளர்கள் கோரியது போல 5 சதவீதம் கமிஷன் தரப்பட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.10ம், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசாவும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இதனால் கமிஷனை கொஞ்சம் மட்டும் உயர்த்தி விலையையும் கொஞ்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications
