'குல்லா' போட்டு ஏழை மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்-விஜயகாந்த் தாக்கு

வட சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தண்டையார் பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றார் விஜயகாந்த். அவருக்கு வீர வாளும், திருக்குரானும் பரிசாக அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் பேசியதாவது:
நான் மதுரையில் வசித்த காலத்தில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். பள்ளிவாசல்களுக்குத் தொடர்ந்து அரிசி வழங்கி வருகிறேன். இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்து வருகிறேன். நபிகள் பெருமானின் ஐந்து கட்டளைகளில் ஏழைகளுக்கு உதவுதல் என்ற இறுதி கட்டளைதான் அனைத்திலும் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கினை தானம் செய்ய வேண்டும். ஏனெனில் வருமானமே கடவுள் கொடுத்ததுதானே.
பெண்கள் நல திட்டத்துக்கு ரூ.50 லட்சம் உதவி: இதனால்தான் நானும் எனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழைகளுக்குச் செலவிட்டு வருகிறேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை துவக்கி இதுவரை ரூ. 50 லட்சம் உதவி செய்துள்ளேன். தனிமனிதனாக யாரேனும் இவ்வாறு செலவு செய்கிறார்களா?.
வாழ்கின்ற காலத்தில் நாம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். ஏழைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். நான் என்னால் முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். அதேபோல் எனது கட்சிக்காரர்களும் உதவி செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு கொடுத்து உதவினார். நான் என்னால் முடிந்த அளவு கல்விக்கும், ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் உதவி செய்து வருகிறேன்.
முஸ்லிம்கள் அன்பு நிறைந்தவர்கள். மனித இதயங்கள் ஒன்று சேரவேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எந்த மதமாக இருந்தாலும் இதயங்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.
விரதம் இருந்து இந்த கஞ்சி குடிப்பது மிகவும் புனிதமானது. முஸ்லிம் மத கோட்பாட்டின்படி, 5 கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். சம்பாதிக்கின்ற பணத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவி செய்து வாழ வேண்டும். நான் 600 பேருக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளேன். 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்து வருகின்றேன்.
நாங்கள் இந்த நிகழ்ச்சியில் குல்லா அணிந்து இறைவனை வணங்குகின்றோம். பல அரசியல்வாதிகள் குல்லா அணிந்து ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள். அதைக் கொடுக்கிறேன், இதைக் கொடுக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஏழ்மை நீங்கியபாடில்லை. நான் தொண்டர்களின் ஆதரவில் நிற்கிறேன். எப்போதும் அக்கிரமத்தை எதிர்ப்பேன். யாருக்கும் பயப்படமாட்டேன்.
நான் ஆணவத்தில் பேசுவதாகக் கூறுகின்றனர். மக்கள் அளித்துவரும் ஆதரவினால்தான் அக்கிரமங்களை எதிர்த்து வருகிறேன். என்னிடம் உள்ள சொத்துகளைப் பறித்தாலும், என்னைத் தாக்கினாலும் அனைத்தையும் சந்திப்பேன். கட்சி ஆரம்பித்தது பஜனை பாடுவதற்கு அல்ல.
எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை. முதல்வர் கருணாநிதிதான் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படுகிறார். ஜெயலலிதா திருச்சியில் நடத்திய கூட்டத்திற்கு பதிலடியாக புதன்கிழமை அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழா என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
அன்பில் தர்மலிங்கம் மறைந்து போய் இவ்வளவு ஆண்டுகள் கழித்து திடீரென சிலை திறப்பது ஏன்? தர்மலிங்கத்தின் மகன்கள் பொய்யாமொழி, பெரியசாமி ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளித்தது உண்டா?.
ஜெயலலிதா மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தினால் அதற்குப் போட்டியாக மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலை திறப்பு விழாவை மதுரையில் கருணாநிதி நடத்துவார்.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் வறுமை ஒழியவில்லை. மக்களவைத் தேர்தலின்போது மானிய விலையில் 25 கிலோ கோதுமையும், ஒரு கிலோ நல்ல அரிசி ரூ.3 க்கும் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.
முதல்வர் கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கிறார். ஆனால் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது. எனவே ஏழைகள் பயன் பெற தேமுதிகவை ஆதரியுங்கள்
இந்த இனிய ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் வாயிலாக எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications