முத்துப் பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்-தலையிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்றம்
திருவாரூர்: விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வருவது. எனவே, அந்த ஊர்வலம் குறித்து வருவாய்த் துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஜாம்பவான் ஓடையைச் சேர்ந்த பி.ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது...
எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாங்கள் பல ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகிறோம். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளராக நான் செயல்படுகிறேன்.
விநாயகர் சிலை ஊர்வலப் பாதை ஜாம்பவான் ஓடையில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் தொடங்கி முத்துப்பேட்டை, ஓடைகரை, டி.டி.பி.சாலை, ஆசாத் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பி.கே.டி.சாலை ஆகியவற்றின் வழியாக இறுதியில் பேட்டை சிவன் கோவிலை அடைந்து அங்குள்ள கோரையாற்றி்ல் கரைக்கப்படுகின்றது.
இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊர்வலம் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 1993-ம் ஆண்டு ஊர்வலத்தின் போது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்கினர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடத்தி வருகின்றோம்.
கடந்த 2009-ம் ஆண்டு முகமது சிப்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை அடுத்து விநாயகர் ஊர்வலத்துக்கு புதிய ஊர்வல பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊர்வலப் பாதையில் அங்காள அம்மாள் கோவில், வெள்ளை விநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், பேட்டை சிவன் கோவில் ஆகியவை இடம் பெறவில்லை. மேலும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, நாங்கள் ஏற்கனவே ஊர்வலம் நடத்தி வந்த பழைய ஊர்வலப் பாதையில் செல்ல எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளதாவது,
இந்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வரும். எனவே, இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் இறுதி முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். மாவட்ட நிர்வாக விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
விநாயகர் சிலை ஊர்வலப் பாதை தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அனைத்து தரப்பினரையும் அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை பற்றி முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன், கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம்.
அந்த பகுதியில் மத நல்லிணக்கம் ஏற்படும் வகையில் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
