திருச்சியி்ல் தங்கபாலுவுடன் இளங்கோவன் ஆதரவாளர்கள் மோதல்
திருச்சி: திருச்சி வந்த மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ளும் இக் கூட்டத்தில், பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுடன் முறைப்படி காங்கிரஸில் இணைகிறார்.
இது தொடர்பாக திருச்சி வந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிட கட்சிகள் இரண்டும் திருச்சியில் கூட்டம் நடத்தியிருக்கின்றன. அதிமுக பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறது. காங்கிரசாரும் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி திருச்சியில் மிக பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு திருச்சிக்கு வந்தார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர் சங்கம் ஹோட்டலில் நிருபர்களை சந்திக்க வந்தார்.
அப்போது அப்போது திருச்சி நகர காங்கிரஸ் தலைவரும், இளங்கோவனின் ஆதரவாளருமான ஆரோக்கியராஜும் அங்கு வந்து தங்கபாலுவுடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
என்னிடம் சொல்லாமல் நீங்கள் எப்படி திருச்சிக்கு வரலாம் என்று சத்தம் போட ஆரம்பித்தார். இதற்கு தங்கபாலுவி் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க இரு தபப்பினரும் ஒருமையிலும் கெட்ட வார்த்தைகளாலும் சத்தம் போட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தங்கபாலுவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ரத்தானது. பின்னர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் காதிகிராப்ட் முன்பாக தங்கபாலுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்தனர்.
கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை-தங்கபாலு:
பின்னர் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா தமிழ்நாட்டில் திருப்பூர், விருதுநகர், மதுரை, கோவை ஆகிய இடங்களைத் தொடர்ந்து திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதுதவிர, பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன என்றார் தங்கபாலு.
கேள்வி: திருச்சி வரும் சோனியாவிடம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுக்கப் போவதாக இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
தங்கபாலு: இப்போதைய முதல் லட்சியம் திருச்சி விழாதான். இக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் பலத்தை நிரூபிப்பார்கள். 40 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். உள்கட்சி விவகாரங்களை வெளியே பேசக் கூடாது என்ற நாகரிகம் அறிந்தவன். கட்சித் தலைவர் சோனியாவின் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறேன்.
கேள்வி: தங்கபாலுவால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
தங்கபாலு: தனிப்பட்ட நபர்கள் (இளங்கோவன்) குறித்து இதுவரை நான் எந்தப் புகாரையும் காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கவில்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் விதிமுறையை தான் கூறினேன். உள்கட்சிப் பிரச்னைகள் பற்றிச் சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும்.
கேள்வி: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் அதிமுககூட்டணி ஏற்படும் என்பது போல் ஜெயலலிதா திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறாரே?
தங்கபாலு: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். அதுபற்றி இப்போது பேசுவது நல்ல பண்பல்ல. இப்போதைக்கு காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. சிறப்பாகவும், செம்மையாகவும் கூட்டணி தொடர்கிறது.
கேள்வி: அடுத்த தேர்தலிலாவது தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் கேட்பீர்களா?
தங்கபாலு: தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னணி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகிய எல்லோருடைய உணர்வுகளையும், கருத்துக்களையும் கட்சி தலைமையிடம் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எடுத்துக் கூறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications