தமிழகத்தில் குடிசைவாசிகளுக்கு ரூ.1000 கோடி செலவில் 220 ஏக்கரில் 23,320 வீடுகள்
சென்னை: தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் 23, 320 வீடுகள் கட்டி குடிசைவாசிகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சுப.தங்கவேலன் தெரிவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள சிவாஜிகணேசன் சாலை, தேனாம்பேட்டை திரு.வி.க. குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைகளையும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளையும் அமைச்சர் நேரில் சென்று பார்த்தார். மேயர் மா.சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் அன்புதுரை, ஏழுமலை ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னையில் தற்போது ஏராளமான குடிசைகள் உள்ளது. அவற்றை அகற்றி சென்னையில் குடிசைகளே இல்லாத வண்ணம் செய்வதே எங்கள் குறிக்கோள். அதற்குத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 35,000 குடிசைகள் அகற்றப்பட உள்ளன.
கூவம் ஆறு, கால்வாய் ஓரங்களில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி குடிசைகளில் முடங்கிக் கிடப்பவர்களுக்காக, பெரும்பாக்கம் மற்றும் கண்ணகி நகரில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இந்த குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அரசு 220 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறது.
இதில் ரூ. 1000 கோடி செலவில் 23 ஆயிரத்து 320 வீடுகள் கட்டப்படும். இங்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கூட்டுறவு அங்காடி என பல வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், குடியிருப்புகளுக்கு லிப்ட் வசதி செய்து தரப்படும்.
ஏற்கனவே கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை புதுப்பிக்கும் பணிக்காக அரசு ரூ. 47 கோடியே 80 லட்சம் அளித்துள்ளது. இதில் ரூ. 24 கோடி சீரமைப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications