விசா கட்டண குறைப்பு கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்கும்! - ஆனந்த் சர்மா
வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைப் பாதிக்கும் பிபிஓ தடை மற்றும் விசா கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்களை அமெரிக்கா உடனடியாக பரிசீலிக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆனந்த் சர்மா, அமெரிக்க வர்த்தக அமைச்சர் ரான் கிர்க் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெளிப்பணி ஒப்படைப்புப் பணிகளை - பிபிஓ- மேற்கொள்வதற்கு ஒஹியோ மாகாண அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இந்தியா தனது அதிருப்தியை அமெரிக்காவிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதைப் போல விசா கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விரு நடவடிக்கைகள் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகம் பாதிக்கும் விஷயமாகும். இது குறித்து வர்த்தக அமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவுக்கு சாதகமான முடிவை விரைவிலேயே அமெரிக்க அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
மேலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறுகிய கால பணிக்குச் செல்லும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சமூக சேவை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதைப்போன்ற ஒப்பந்தம் பிற ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ளது. எனவே இந்தியாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிச்சயம் ஏற்கும் என்றும் ஆனந்த் சர்மா கூறினார்.
இவை தவிர, இரு தரப்பு வர்த்தக உறவை அதிகரிப்பது குறித்தும், எல்லைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சோதனை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்டவற்றில் இணைந்து செயலாற்றவும், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தில் வெளிநாட்டு நிறுவன பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்போது அதற்காக தனித்தனியே லைசென்ஸ் பெற வேண்டும். இதை இந்திய நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த விவகாரமும் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஆனந்த் சர்மா கூறினார்.












Click it and Unblock the Notifications