21ம் நூற்றாண்டின் அற்புதமான கிராஃபைனைக் கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
51 வயதான ஆன்ட்ரி கெய்ம், 36 வயதேயான கான்ஸ்டான்டின் நோவோசெலவ் ஆகியோரே விருது பெறுபவர்கள். இருவரும் ரஷ்யர்கள். இருப்பினும் தற்போது இங்கிலாந்து குடியுரிமை பெற்று மான்செஸ்டரில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சாதாரண பென்சில் 'ஊக்கு' (முனைப்பகுதி) தான் இந்த இரு விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசை வாங்கித் தந்துள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பான கிராஃபைன் உண்மையிலேயே மிகவும் அற்புதமானது என்பதில் சந்தேகம் இல்லை. கிராபைட்டிலிருந்து (பென்சில் நுனிப்பகுதியில் உள்ள கார்பன்) கிராஃபைனை பிரித்து எடுத்ததுதான் இந்த இரு வி்ஞ்ஞானிகளும் செய்த சாதனை. ஒரு மில்லிமீட்டர் கிராபைட்டில், கிட்டத்தட்ட 30 லட்சம் அடுக்குக் கொண்ட கிராஃபைன் இருப்பதாக கண்டுபிடித்துச் சொன்னவர்கள் இந்த ரஷ்யர்கள். அதை விட முக்கியமானது மட்டுமல்ல, ஆச்சரியமானதும் கூட இந்த கிராஃபைனின் தன்மைகள்.
இது ஒரு நானோ மெட்டீரியல். மிக மிக மெல்லிய படலம் போன்றது இந்த கிராஃபைன். அதேசமயம், இருப்பதிலேயே மிகவும் வலுவானதுதான் இதுதான். நல்ல அடர்த்தியானதும் கூட. இருப்பதிலேயே மிகவும் சிறிய வாயு அணு ஹீலியம்தான். ஆனால் அந்த ஹீலியத்தால் கூட இந்த கிராஃபைனை துளைத்துக் கொண்டு போக முடியாது என்றால்,அது எவ்வளவு அடர்த்தியானது என்பது புரியும்.
கார்பனின் இன்னொரு வடிவம் இந்த கிராஃபைன். கார்பனை விட ஒரு அணு அடர்த்தி அதிகம் கொண்டது, அவ்வளவுதான். படுக்கை வசமான அடுக்குகளுடன் கூடிய கார்பன் அணுக்கள் இவை. இரு பரிமாணம் கொண்ட தேன் கூட்டைப் போன்ற வடிவம் கொண்ட மிகவும் இறுக்கமான அடுக்குகளாக இவை கிராபைட்டில் காணப்படுகிறது.
மின் கடத்தியாகவும், வெப்பக் கடத்தியாகவும் இதை பயன்படுத்தலாம். இதனால், சிலிக்கான் செமி கண்டக்டார்களுக்குப் பதிலாக இந்த கிராஃபைனைப் பயன்படுத்த முடியும்.
கிராஃபைனை, கைக்கடிகாரங்கள், சோலார் பேனல்கள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், கார்கள், விமானங்கள், செயற்கைக் கோள்கள் என பலவற்றுக்கும் பயன்படுத்த முடியும். மேலும் டச் ஸ்க்ரீன் தயாரிப்புக்கும் இதை பயன்படுத்த முடியும்.
மிகவும் எளியது, மெல்லியது, அதேசமயம், உறுதியான நானோ மெட்டீரியல் கிராஃபைன் என்பதால் இது எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், பல்வேறு தயாரிப்புகளுக்கும் மிகப் பெரிய உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால்தான் இதை 21ம் நூற்றாண்டின் அற்புதம் என இயற்பியலாளர்கள் வர்ணிக்கின்றனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆன்ட்ரியும், நோவோசெலவோவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குப் பரிசாக 9 லட்சம் பவுண்டுகள் கிடைக்கும்.













Click it and Unblock the Notifications