20 எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்-கர்நாடக பாஜக நெருக்கடி முற்றுகிறது

இதையடுத்து அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள மேலும் இரு அமைச்சர்களை முதல்வர் எதியூரப்பா டிஸ்மிஸ் செய்துள்ளார்.
இதையடுத்து சிக்கலைத் தீர்க்க பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூர் விரைந்துள்ளார்.
முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக 7 அமைச்சர்கள் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சென்னையில் தங்கி அரசுக்கு எதிராக ரகசிய ஆலோசனைகளி்ல் ஈடுபட்ட இவர்களில் 4 பேரின் அமைச்சர் பதவிகளை எதியூரப்பா பறித்தார்.
இதையடுத்து இதில் 20 பேர் அரசுக்கு அளி்த்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 12ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் எதியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இரு அமைச்சர்கள் பதவி பறிப்பு:
இதில் 15 பேர் பாஜகவினர், 5 பேர் சுயேச்சைகள். இந்த சுயேச்சைகளில் அமைச்சர்களாக இருந்த 4 பேரின் பதவிகளைத் தான் எதியூரப்பா நேற்று பறித்தார். இன்று 2 பாஜக அமைச்சர்களின் பதவியைப் பறித்தார்.
இதையடுத்து வரும் 11ம் தேதி சட்டப் பேரவை கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று எதியூரப்பா அறிவித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், இப்போது பாஜக அரசின் பலம் 103 ஆகக் குறைந்துவிட்டது.
இதனால் காங்கிரஸ் அல்லது மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து எம்எல்ஏக்களை இழுத்தால் தான் பாஜக அரசைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை அந்தக் கட்சியின் தலைவர்கள் ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
இந் நிலையில் அதிருப்தி எம்எமல்ஏக்கள் 20 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்குச் சென்று அங்கிருந்து ஷீரடிக்குச் சென்றுவிட்டனர். நாங்கள் சாய்பாபாவை தரிசிக்க வந்துள்ளோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் வேலைகளில் முன்பு எதியூரப்பா அரசைக் கவிழ்க்க முயன்ற அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் ஈடுபட்டுள்ளது தான் வேடிக்கை. அரசு கவிழ்ந்துவிட்டால், தங்களது சுரங்கத் தொழிலுக்கு பிரச்சனை வரும் என்பதால் அரசைக் காக்கும் முயற்சிகளி்ல் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தூதர் ஒருவர் ஷீரடி சென்று இவர்களுடன் சமாதானப் பேச்சு நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் தான் காரணம்-வெங்கையா:
மேலும் கர்நாடகத்தின் முதல் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக மூ்த்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவை கட்சி மேலிடம் பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், கட்சித் தலைவர் நிதின் கத்காரி உத்தரவின்பேரில் நான் வந்துள்ளேன். தற்போதைய பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்போம். ஆட்சி கவிழ்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதை நடக்க விடமாட்டோம் என்றார்.
கெளடா, குமாரசாமி தான் காரணம்-எதியூரப்பா:
இந் நிலையில் ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கெளவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் இருப்பதாக முதல்வர் எதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
19 எம்.எல்.ஏக்களுக்கும் தலா ரூ. 20 முதல் ரூ. 30 கோடி வரை வீடு தேடிச் சென்று கொடுத்துள்ள குமாரசாமிதான் அவர்களை இயக்குவதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபையில் நடைபெறும் பலப்பரீட்சையில் எதியூரப்பா தலைமையிலான 29 மாத கால பாஜக அரசு பிழைக்குமா என்பது 11ம் தேதி தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications
