Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயக்குமார் பெயரைத்தான் டிஜிபி பதவிக்கு பரிசீலித்திருக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலில் விஜயக்குமார் பெயரைத்தான் டிஜிபி பதவிக்கு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால் டிஜிபி நியமனம் தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மற்ற அதிகாரிகளின் சாதக, பாதகங்களை பரிசீலித்தார்களா என்பதற்கான எந்த அடையாளமும் அதற்கான கோப்பில் காணப்படவில்லை. முறையான தேர்வு நடந்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் இந்த கோப்புகளில் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் செயலையும் அது விமர்சித்துள்ளது.

டிஜிபி நியமனம் தொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகளுக்கான டிஜிபி நடராஜ் தொடர்ந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்குப் பி்ன்னடைவாக கருதப்படும் இந்த தீர்ப்பின் முழு விவரம்...

டிஜிபி நியமனம் தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மற்ற அதிகாரிகளின் சாதக, பாதகங்களை பரிசீலித்தார்களா என்பதற்கான எந்த அடையாளமும் அதற்கான கோப்பில் காணப்படவில்லை. முறையான தேர்வு நடந்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் இந்த கோப்புகளில் பார்க்க முடியவில்லை

அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை:

பெயர் தெரியாத அதிகாரி தயாரித்த குறிப்புகளைத் தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சாதக, பாதக அம்சங்களை பரிசீலனை செய்ததை சுட்டிக்காட்டும் அளவுக்கு, கோப்பில் எதுவும் இல்லை. முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை இந்தக் கோப்பு வெளிப்படுத்தவில்லை.

மற்றவர்களை விட லத்திகா சரணுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்ததற்கான காரணம் எதையும் கோப்பில் தெரிவிக்கவில்லை. லத்திகா சரணை தேர்வு செய்யும் போது, தகுதியுள்ள மற்ற அதிகாரிகளின் சர்வீஸ் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் மிகவும் உன்னிப்பாக பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தலைமைச் செயலாளர் அவற்றை ஒட்டுமொத்தமாக பின்பற்றவில்லை. இந்த பணிநியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

விஜயக்குமார் பெயரை பரிசீலித்திருக்க வேண்டும்:

கே.விஜயகுமாரை பொறுத்தவரை, அவர் தமிழகத்தை விட்டு வேறு பணிகளுக்கு சென்றிருந்தாலும் அவரது உரிமை தொடர்ந்து தாய்ப்பணியிடமான தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் பணியிட மாற்றம், பதவி உயர்வு, பணி மூப்பு போன்றவற்றில் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு அவருக்கு முழு தகுதியும், உரிமையும் உள்ளது. எனவே அவரது பெயரையும் அரசு பரிசீலித்து இருக்க வேண்டும்.

கே.விஜயகுமார், மாநில அரசு பணிக்கு 1975-ம் ஆண்டு வந்தார். 9.9.08 முதல் அவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தற்போதுள்ள அவரது பணி நிலை நடராஜூக்கு சமமாக உள்ளது. மேலும் லத்திகா சரணின் பணிநிலைக்கு மேலாகவும் உள்ளது. எனவே கே.விஜயகுமார் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இவரது பெயரை, டி.ஜி.பி. பதவிக்கு பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இந்த முகாந்திரத்தின்படியே லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்ததை ரத்து செய்யலாம். டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தீர்ப்பாயத்திற்குக் கண்டனம்:

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், மனதை செலுத்தாமல் தீர்ப்பாயம் இப்படி உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பாயம் முறையாக அணுக தவறி விட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, கடமை எங்களுக்கு உள்ளது.

எனவே லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்து 8.1.10 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், அதற்கு சாதகமாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகின்றன.

சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற தகவல் இந்த கோர்ட்டுக்கு கிடைத்ததும், தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து அந்த உத்தரவுகளை தடம்புரளாமல் பின்பற்ற செய்ய வேண்டியது எங்களது கடமை மற்றும் பொறுப்பு என்று உணர்ந்தோம்.

எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.

- டி.ஜி.பி. ரேங்கில் இருக்கும் அனைத்து தகுதியுள்ள அதிகாரிகளின் பெயர் பட்டியலை தலைமைச் செயலாளர் தயாரிக்க வேண்டும். (இந்த தேதியில் எச்.ஏ.ஜி.+ரூ.75 ஆயிரம்-ரூ80 ஆயிரம் என்ற சம்பள விகிதத்தில் உள்ளவர்கள்). அவர்களது அனைத்து பணி ஆவணங்களையும் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பான பெயர்ப் பட்டியலை தயாரிக்கும்படி யு.பி.எஸ்.சி.யை தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து தகவல்களும் 26-ந் தேதிக்குள் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

- யு.பி.எஸ்.சி.க்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவற்றை தலைமைச்செயலாளர் வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் (12.11.10க்கு முன்பு) சிறப்பு தூதுவர் மூலம் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.

- அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள வழிமுறைகளின்படி i.பி.எஸ்.சி. ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதை 26.11.10க்குள் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

- அதிலிருந்து ஒருவரை டி.ஜி.பி.யாக தலைமைச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் 7.12.10-க்குள் முடிக்கப்பட வேண்டும்.

- அதுவரை லத்திகா சரண் டி.ஜி.பி.யாக பதவி வகிக்க அனுமதிக்கப்படுகிறார்.

- இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளனவா என்பதுபற்றி 14.12.10 அன்று உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

- இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தையும் தெரிவிக்க கோர்ட் முன் வரவில்லை என்று நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+