சேலத்தில் மளமளவென மாறும் அம்மா உணவகங்கள்.. 1.10 கோடி ரூபாயில் தலைகீழ் மாற்றம்.. அசத்தும் விஜய் அரசு
சேலம்: சேலத்தில் 11 அம்மா உணவகங்கள் அப்படியே தலைகீழாக மாறப்போகிறது! சேலம் மாநகர ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் மையங்களாக திகழும் இந்த உணவகங்கள், பல ஆண்டுகால மங்கிய நிலையை உடைத்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய பொலிவு பெறத் தயாராகிவிட்டன... ரூ.1.10 கோடி நிதியில் நடக்க போகும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? இங்கே சுருக்கமா பார்க்கலாம்.
தினந்தோறும் வெறும் ரூ.20 செலவில் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவைப் பெற முடிவதால்ததான், அம்மா உணவகத் திட்டம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அம்மா உணவகங்கள்
இப்போது முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகங்களை மறுபடியும் முழுவீச்சில் செயல்படச் செய்வதுடன், அவற்றின் தரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் மற்றும் உணவுத் தர மேம்பாட்டின் காரணமாக பொதுமக்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை தினசரி சராசரியாக 67 ஆயிரம் பேர் மட்டுமே அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தார்களாம். ஆனால், ஜூன் மாதத்தில் முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் ஆட்சியில் சாதனை
இந்த எண்ணிக்கையை உயர்த்த மாவட்டந்தோறும் பல்வேறு அதிரடிகள், ஆய்வுகள், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.. இன்றுகூட திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அருண்ராஜ் திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், உணவை நேரடியாக சாப்பிட்டு அதன் தரத்தையும் சுவையையும் பரிசோதித்தார்.
அதுமட்டுமல்ல, உணவின் தரத்தை எப்போதும் ஒரே தரத்தில் பராமரிக்கவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சுத்தமான, தரமான உணவு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
சேலம் 11 அம்மா உணவகங்களில் மாற்றம்
அதேபோல சேலத்திலும் ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சேலம் மாநகராட்சியில் புதிய பொலிவுடன் அம்மா உணவகங்கள் மெருகேறத் தொடங்கியுள்ளதாம்.. கடந்த 10 வருடங்களாகவே போதிய பராமரிப்பு இல்லாமல் மங்கிப்போயிருந்த உணவகங்கள் இப்போது விஜய் ஆட்சிக்கு பிறகு, பொலிவு பெற துவங்கி உள்ளதாம்.. முதலமைச்சர் வழங்கிய உத்தரவின் பேரில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.10 கோடி நிதியை ஒதுக்கி சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, சூரமங்கலம், மணியனூர், சத்திரம், பழைய சூரமங்கலம், அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், வெங்கடப்பன் சாலை என மொத்தம் 11 இடங்களில் இந்த அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறும் இந்த உணவகங்களில், தலா ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு, உணவகங்களுக்கு பெயிண்ட் அடித்தல், ரிப்பேராகி உள்ள ஃபேன்களை மாற்றி, புதிய ஃபேன்களை பொருத்துவது, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்தல், நவீன சமையல் உபகரணங்கள் வாங்குதல் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1.19 கோடி நிதியை ஒதுக்கிய அரசு
இதில், மணியனூர் அம்மா உணவகத்திற்கு மட்டும் ரூ.20.5 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அறைகள் கட்டுவதற்கும், சூரமங்கலம் உழவர் சந்தை அருகிலுள்ள உணவகத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணிகள் மூலம் அம்மா உணவகங்களின் தோற்றமே மாறப்போகிறதாம்.. அத்துடன் பொதுமக்களுக்கும் சுகாதாரமான சூழலில் உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்..
இருந்தாலும் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்கப்படுவதால், உணவு தரமான முறையில் தயாரித்து வழங்க முடியாத சிரமம் உள்ளதாக அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் பெண்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்..
எனவே, அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி, தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே, இந்த மறுசீரமைப்புத் திட்டம் முழுமையான பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..!!














Click it and Unblock the Notifications