ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. தடையை மீறி சென்றதாக ராகுல், பிரியங்கா மீது பாய்ந்தது வழக்கு
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அனுமதி இன்றி அகில இந்திய வானொலி அலுவலகத்திற்கு நுழைந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு எதிராக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வாக்குகள் திருடப்பட்டு இருப்பதாக கூறி இந்தியா கூட்டணி எம்பிக்கள் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேற்று பேரணி மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் பேரணியாக சென்றனர். ஆனால் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதாக கூறி அவர்களை போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து, அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் நுழைந்தனர். அங்கிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். தடையை மீறி செல்ல முயன்றதால் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அகில இந்திய வானொலி அலுவலக வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதையடுத்து காவலில் வைக்கப்பட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஆகாஷ் வானி வானொலி நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரின் பேரில் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கவும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
