நகை பாலிஷ் செய்து தருவதாக மோசடி : 2 பீகார் வாலிபர்கள் கைது
நெல்லை: நகை பாலிஷ்செய்து தருவதாக கூறி மோசடி செய்த 2 பீகார் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை சிவந்திபட்டி அருகே உள்ள தெற்குவெட்டியபந்தி கிராமத்தில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் நகை பாலிஷ் செய்து தருவதாக தெருவில் கூவிக் கொண்டே சென்றனர்.
இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த அழகு என்பவரின் மனைவி மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த 20 கிராம் நகையை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்து பாலிஷ் செய்து தருமாறு கூறினார். இதை பெற்றுக் கொண்ட அந்த நபர்கள் நகையை ரசாயன திரவத்தில் போட்டு பாலிஷ் செய்து கொடுத்தனர்.
அப்போது அதன் எடை குறைந்து காணப்பட்டது. துண்டு, துண்டாகவும் நொருங்கி விழுந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாரியம்மாள் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்தார். ஊர் மக்கள் திரண்டு வந்து வாலிபர்கள் இருவரையும் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்களை சிவந்திபட்டி போலீசில் ஒப்படைத்தனர். சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், முகேஷ்குமார் என்பதும், அவர்கள் பல்வேறு இடங்களில் இதே போல் நகை பாலிஷ் செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications