விரைவில் காங்கிரஸில் இணைகிறேன்-எஸ்.வி.சேகர்
சென்னை: திமுகவுக்காக ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு கட்சித் தலைமையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அத்தோடு நில்லாமல் திமுகவுடனும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.
திமுக தலைமைக்கும், ஆட்சிக்கும் ஆதரவாகப் பேசி வந்தார். இதையடுத்து அவரையும், அனிதா ராதாகிருஷ்ணனையும் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
அதன் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார். திருச்செந்தூர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் சேகர் இன்னும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பு திமுகவில் வந்து சேர்ந்ததும் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், இதனால் சேகர் அப்செட்டில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் டெல்லி சென்று ராகுல் காந்தியை அவர் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும் அதை சேகர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் காங்கிரஸில் சேரப் போவதாக கூறியுள்ளார் சேகர்.
இதுகுறித்து ஒரு பத்திரிகைக்கு சேகர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் செயல்பாடு என்னைக் கவர்ந்ததால் அவரை சந்திக்க அனுமதி கேட்டேன். கிடைத்தது. போய்ச் சந்தித்தேன். அவருடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து தங்கபாலு, ஜி.கே.வாசன், இளங்கோவன், சுதர்னம் நாச்சியப்பன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினேன். ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினேன். கார்த்தி சிதம்பரத்தையும் சந்திப்பேன்.
என்னை விரைவில் டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகவும், அகமது படேல், குலாம் நபி ஆசாத் ஆகியோருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார் தங்கபாலு. அதன் பின்னர் காங்கிரஸில் இணைவேன் என்று கூறியுள்ளார் சேகர்.
ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வப் பெருந்தகை, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தனி அமைப்பை நடத்தி வந்தார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில்இணைந்து அதன் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டதும் காங்கிரஸில் போய்ச்சேர்ந்து கொண்டார். ஆனால் இதுவரை அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.
தற்போது அதே பாணியில் எஸ்.வி.சேகரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாமலேயே தொடர்ந்து ஒவ்வொரு இயக்கமாக மாறி வருகிறார். செல்வப் பெருந்தகை பாணியில் அவர் காங்கிரஸில் சேருவாரா அல்லது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சேருவாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications