பள்ளிக் கட்டண நிர்ணயத்தில் பெரும் குழப்பம்-நீதிபதி கோவிந்தராஜன் விலகலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் பள்ளிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த கமிட்டியின் தலைவரான நீதிபதி கோவி்ந்தராஜன் பதவி விலகுவதாக தகவல் வெளியானதால் பரபரப்பு கூடியது.

தனியார் பள்ளிக்கூடங்கள் கணக்கு வழக்கே இல்லாமல் கட்டணம் வசூலித்து வருவதாக அரசுக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை நியமித்தது. இந்த கமிட்டி பல்வேறு பள்ளி நி்ர்வாகங்கள், பெற்றோர்களிடம் கருத்தை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

இக்கமிட்டி அளித்த பரிந்துரையின்படி புதிய கட்டண நிர்ணயத்தை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதை பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஏற்கவில்லை. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடின. உயர்நீதிமன்றம், இதற்கு இடைக்கால தடை விதித்தது.

இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த தடை உத்தரவு விலக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு நீக்கத்தை பள்ளிக்கூடங்கள் அமல்படுத்தாமல் கூடுதல் கட்டணத்தையே தொடர்ந்து வசூலித்து வருகின்றன. இதுதொடர்பாக தினசரி தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் பெற்றோர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதும், மோதல்கள் மூளுவதுமாக உள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் கோரி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்தான் இந்த கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த பட்டியலைப் பார்த்த பலருக்கும் பெரும் குழப்பம். காரணம், மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் பெரும் குழப்பமாகி விட்டது.

மொத்தம் 10,934 பள்ளிகளுக்குரிய கட்டண விவரம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாணவர்களிடம் எந்த வகையான கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனவும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில், அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன கேந்திரி வித்யாலயா பள்ளிக்கு முதல் வகுப்பிற்கு ரூ.3,005, பிளஸ்-2விற்கு ரூ.9,600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு நடத்தும் பள்ளியாகும்.

இந்தக் குழப்பம் குறித்து கேந்திரிய வித்யாலயா சங்கேதன் கல்வி நிறுவன அதிகாரி பி.தேவகுமார் கூறுகையில், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு மாநில அரசு எப்படி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்.

இவை மத்திய அரசு நேரிடையாக நடத்தும் பள்ளிகள். 8-ம் வகுப்பு வரை மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை. இலவச கல்விதான். எஸ்.சி., எஸ்.டி. மாணவ- மாணவிகளுக்கு பிளஸ்-2 வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எங்களுக்கு தமிழக அரசிடமிருந்தோ, பள்ளி கல்வித்துறையிடம் இருந்தோ கடிதமோ, விண்ணப்ப படிவமோ வரவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை.

இது பற்றி நீதிபதி கோவிந்தராஜனிடம் தெரிவித்தபோது இதுகுறித்த ஆட்சேபனை கடிதத்தை கமிட்டிக்கு அனுப்புமாறும் அதை கருத்தில் கொண்டு நடந்த தவறை திருத்தி கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.

இதை விட பெரிய காமெடி என்னவென்றால், சென்னை சூளைமேடு, திருமங்கலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கோவிந்தராஜன் கமிட்டி கேட்ட விளக்கத்திற்கு தகவல் அளிக்காததால் அந்த பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு தலையிடவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டண நிர்ணயக் குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் குழப்பத்தை மேலும் பெரும் குழப்பமாக்கியுள்ளது. பெற்றோர்கள் பெரும் விரக்தியில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்துள்ளதாகவும், தனது உடல்நிலை காரணமாக கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோவிந்தராஜன் அரசுக்குத் தகவல் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு குழப்பத்தை நீக்கி, பெற்றோர்களின் விரக்தியைப் போக்க வேண்டும், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+