Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய கதைகளைக் கட்டி நேரு குடும்பத்தையும், திமுகவையும் பிரிக்க நினைக்கும் புல்லுருவிகள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஏதோ நேரு குடும்பத்திற்கும், இந்த இயக்கத்திற்கும் பகை இருப்பது போல இன்றைக்குச் சில புல்லுருவிகள் புதிய கதைகளை எல்லாம் கட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புக்கும் இடையே சிண்டு முடிய நினைக்கும் அவர்களின் எண்ணம் பலிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் லயோலா ஈகாம் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற பெயரில் புதிய என்ஜினீயரிங் கல்லூரி ரூ.93 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

கல்லூரியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வாடிகன் நகரத்திற்கு சென்று போப் ஆண்டவருடைய பீடத்தைக் காணும்பொழுது ஏற்படுகின்ற உணர்வு, சென்னை லயோலா கல்லூரிக்குள்ளே நுழையும்போது ஏற்படுகின்ற உணர்வாக எனக்கு எப்போதுமே ஏற்படுவது உண்டு. ஏனென்றால் அத்துணை தூய்மையான, புனிதமான, அறிவார்ந்த, அன்புள்ள இடமாக இந்த இடத்தை நான் கருதி வருகிறேன். இந்தக் கல்லூரிதான் என்னுடைய இந்தப் புகழுரைக்கு ஏற்ற கல்லூரியாக தமிழகத்திலே அமைந்திருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகளால், அது காத்து வருகின்ற அமைதியால், அது வளர்த்து வருகின்ற அன்பின் பெருக்கால், அது வழங்குகின்ற அருட்செல்வத்தால் அந்தப் புகழை எய்தியிருக்கிறது.

லயோலா கல்லூரியும், பிரான்ஸ் நாட்டு ஈகாம் எனும் சர்வதேச கல்வி நிறுவனமும் இணைந்து இங்கே நிறுவியுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கி வைப்பதில் நான் அடைகிறேன். இந்த இனிய வேளையில், பிரான்ஸ் நாட்டு ஈகாம் கல்வி நிறுவனம் இந்தியாவிலே கைகோத்துள்ள ஒரே நிறுவனம் லயோலா கல்லூரிதான் என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு செய்தியாகும்.

பிரான்ஸ் ஈகாம் கல்வி நிறுவனம் பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் பொறியியல் கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்து - விஞ்ஞானம் மற்றும் பொறியியல் கல்வி வழங்கி - எதிர்காலத்திற்குத் தேவையான பொறியியல் வல்லுநர்களை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உருவாக்கி வருகிறது. அதைப்போலவே, ஏறத்தாழ 2 நூற்றாண்டுகளாக கலை, அறிவியல் துறை தொடர்பான கல்வியை இந்த லயோலா கல்வி நிறுவனம் வழங்கி, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கிப் புகழ் வளர்த்து வருகிறது.

இந்தப் பொறியியல் கல்லூரியில் 30 சதவீத மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர்களாக இருப்பார்கள் என்பதும், ஏழை சிறுபான்மை மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்பதும்; நாம் அனைவரும் மகிழ்ந்து போற்றத்தக்க செய்தி. இந்தப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கி வைக்கும் இனிய வேளையில்; ஏசு சபையைச் சேர்ந்த சான்றோர்கள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய, ஆற்றி வருகின்ற மிகப்பெரிய தொண்டினை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றி, அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இங்கே பேசிய அனைவரும், தமிழக அரசு எந்த அளவிற்குத் தமிழார்வம் கொண்டிருக்கிறதோ, அதைப் போல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்குத் துணைபுரிகின்ற அரசாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக் காட்டினார்கள். அதனால்தான் எங்கள் ஆட்சிக்குக் கூட சிறுபான்மை ஆட்சி என்று ஒரு பட்டம் உண்டு. நான் அதைப் பெருமையாகத்தான் கருதிக்கொண்டிருக்கின்றேன். மைனாரிட்டி அரசு என்று அவர்கள் படித்த ஆங்கிலத்தில் எங்களை விமர்சிப்பது உண்டு. நான் சொல்லியிருக்கிறேன்; ஆமாம்; நாங்கள் மைனாரிட்டி அரசுதான்; மைனாரிட்டிகளுக்காக இருக்கின்ற அரசு இந்த அரசு என்று பெருமையோடு சொல்லியிருக்கிறேன்.

இந்த அரசை மாற்ற வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள், மாற்றியே தீரவேண்டும் என்று விரும்புகின்றவர்கள், மாற்றியே தீருவோம் என்று சபதமிடுவோர், ஆட்சி மாறியே தீரும் என்று சாபமிடுகிறவர்கள், இவர்கள் அத்தனை பேருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மாறினாலும், மாற்றினாலும், மாற்றியே தீருவோம் என்கின்ற அவர்களுடைய சபதம் நிறைவேறினாலும், ஒன்றை மாற்ற முடியாது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்திருந்தாலும், அமர முடியாவிட்டாலும், அந்த வாய்ப்பினை நீங்கள் எங்களுக்கு வழங்கினாலும், வழங்க இயலா விட்டாலும், அதை நாங்கள் பெறத் தவறினாலும், பெற முடியாமல் போனாலும், நாங்கள் என்றென்றைக்கும் உங்களுக்காக இருப்பவர்கள், உங்களுக்காகப் பணிபுரிகின்றவர்கள்.

அரசு என்கின்ற அந்த அதிகாரம் தேவையில்லை. அது இல்லாமலே எங்கள் அன்பால், நாங்கள் பெற்றிருக்கின்ற உணர்வால், நீண்ட நெடிய காலமாக இந்த நாட்டிலே நாங்கள் கண்டு வருகின்ற பல்வேறு காரண காரிய விளக்கங்களையெல்லாம் உணர்ந்து, உங்களுக்காக இருக்கின்றவர்கள்தான் இங்கே, இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

என்ன சொல்லி எங்களை வீழ்த்துவது? நாங்கள் சிறுபான்மையினருக்காகப் பாடுபடுகிறோம் என்பதைச் சொன்னால், சிறுபான்மையினருடைய ஆதரவை, சொல்லுகின்றவர்கள்; இழக்க நேரிடும். நாங்கள் மதவாதிகளிலே சில பேருக்காக எதிர்ப்பு காட்டுகிறோம் என்று சொன்னால், அந்த மதவாதிகளால் மனமுடைந்து போயிருக்கின்ற ஒரு பெரிய சமுதாயத்தின் ஆதரவை, அவர்களை அறியாமலேயே எங்களுக்குத் திரட்டி அளிக்கிறார்கள் என்று ஆகிவிடும்.

பொதுவாக இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கம் தேவை என்பதற்காக, மத வேறுபாடு களைந்த மனித நேயம் தேவை என்பதற்காகப் பாடுபடுகின்றவர்கள் நாங்கள். அதை நீங்கள் அறிவீர்கள். அது ஸ்ரீங்கம் கோயில் ஆனாலும், அல்லது அயோத்தி ராமர் ஆலயம் ஆனாலும், அல்லது இடிக்கப்பட்ட பாபர் மசூதி ஆனாலும், இவற்றுக்கு எல்லாம் சரித்திரத்திலே சில வேர்கள் இருக்கின்றன. ஆனால், சரித்திரம் என்றைக்கும் மாற முடியாத, மாற்ற முடியாத ஒன்று!

ஆட்சி நடத்துகின்ற எங்களுடைய கட்சி, நான் தலைமையேற்றிருக்கின்ற இந்தக் கட்சி, கடந்த காலத்திலே ஒரு மாநிலத்தினுடைய தேவைகளுக்காக, மாநில உரிமைகளுக்காக, மாநிலத்திலே இருக்கின்ற மக்களுடைய நன்மைகளுக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டு, அண்ணாவால் வழிநடத்தப்பட்டு, எங்களால் இன்றைக்குப் பின்பற்றப்படுகின்ற, உங்களால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு இயக்கம்.

ஆனால், இந்த இயக்கத்தை நாங்கள் யாரிடத்திலே அன்பு செலுத்துகிறோமோ, அந்த அன்பைப் பிரித்து, அந்த நட்பைப் பிரித்து பலவீனப்படுத்தி, அதன் காரணமாக பொறுப்பிலே இருந்து எங்களை விரட்டி விடலாம் என்று யாராவது கருதுவார்களேயானால்; அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நாங்கள் கொண்டிருக்கின்ற நாணயமான ஜனநாயக நெறியில் இருந்து எங்களை யாரும் விரட்ட முடியாது.

நாங்கள் கடைபிடிக்கின்ற அரசியல் நாகரிகத்தை யாரும் துடைத்தெடுக்க முடியாது; நாங்கள் கட்டிக் காத்து வருகின்ற பண்பாட்டை யாரும் புண்படுத்த முடியாது. அதனை நான் இந்தக் கூட்டத்தில் திட்டவட்டமாக, திண்ணமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், எங்கள் விரோதிகளும் கூட அறிவாளிகளாக இருந்தால், நாங்கள் அவர்களை மதிப்பவர்கள். அவர்களுக்குத் தலை வணங்குகின்றவர்கள் நாங்கள். எங்களுடைய எதிரிகளும் தியாகிகளாக இருந்தால், அவர்களை மதிப்பவர்கள் நாங்கள். இதுதான் எங்களுடைய சரித்திரம்.

இந்தக் கூட்டத்திற்கு நான் வருவதற்கு முன்பு பழைய கவிதைகளையெல்லாம் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் எழுதிய கவிதைகள். அவற்றைப் புரட்டும் பொழுது என் கண்ணில் பட்ட கவிதை ஒன்று - நேருவைப் பற்றிய கவிதை. ஏதோ நேரு குடும்பத்திற்கும், இந்த இயக்கத்திற்கும் பகை இருப்பது போல இன்றைக்குச் சில புல்லுருவிகள் புதிய கதைகளை எல்லாம் கட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நேரு குடும்பத்துக்கும் எங்களுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நேருவையோ, அவரது மகள் இந்திரா காந்தியையோ, அவருடைய குடும்பத்தாரையோ, யாரையும் இழித்தும் பழித்தும் பேசுகின்ற இழிகுணம் படைத்தவர்கள் அல்ல இன்றைக்கு ஆட்சியிலே இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தார் என்பதை இந்த மாமன்றத்திலே நான் பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக வெளியிட விரும்புகின்றேன்.

இதை விளக்கித்தான் அன்றைக்கே கவிதை எழுதியிருக்கிறேன். ஏதோ இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலைகளுக்காக எழுதிய கவிதை அல்ல. 1970ஆம் ஆண்டுக்கு முன்பே நான் எழுதிய தலைமைக் கவிதை. அதைப்படித்தால், என்னுடைய நேர்மை, இந்த இயக்கத்தின் நாணயம். கண்ணியம் இவை எல்லாம் உங்களுக்குப் புரியும்.

இன்று அந்தக் குடும்பத்திற்கும், எனக்கும் பகை மூட்டி, அரசியலிலே மீன் பிடிக்கலாம் என்று சிலபேர் கருதிக் கொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகள், கட்டுரைகள், விதண்டா வாதங்கள் இவற்றைச் செய்து வருகின்றார்கள். அவர்கள்- அந்தக் குடும்பத்தார் - இன்றைக்கு இருக்கின்ற சோனியா காந்தி உட்பட அனைவரும் இந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தால் - இன்றைக்கு உள்ள அரசியல் நிலைக்காக அல்ல, அன்றைக்கு அலகாபாத் மாவீரன், ஆசியாவின் ஜோதி பண்டித நேருவை நாம் இழந்தபோது என்ன உள்ளம் கொண்டிருந்தோமோ, என்ன உணர்வு கொண்டிருந்தோமோ, அந்த உணர்வு இன்றைக்கு நேரு இல்லாத காலத்திலும் நம்முடைய உள்ளத்திலே இருக்கிறது.

அரசியல் ரீதியாக பல எதிர்ப்புக்களை தி.மு.க. காட்டியதுண்டு; கருப்புக் கொடி கூட ஒரு காலத்திலே காட்டியதுண்டு. அரசியலில் வேறுபாடு வேறு! அறிஞர்களை, தியாகிகளை மதிப்பது என்பது வேறு. எனவே, கண்ணியம் தவறும், கடமை தவறும், இந்த நாட்டிலே நன்முறை தவிர்த்த வன்முறை தலைதூக்கும் என்றெல்லாம் யாராவது கருதுவார்களேயானால், அந்த சிண்டு முடிகின்ற வேலையில் யாரும் வெற்றி பெற முடியாது என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+