காவிரி நீர்: கர்நாடகத்திடம் நஷ்டஈடு வசூலிக்க கோரும் ஜெ!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சம்பா சாகுபடியை பாதுகாக்க முன்பே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்துவிட்டார் கருணாநிதி. காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் மறுத்த பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
கருணாநிதியின் எண்ணமெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் உறவைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறதே தவிர, தமிழர்களின் உரிமையை கேட்டுப் பெறுவதில் இல்லை.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டதால் தமிழக டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமையை கருணாநிதி தட்டிக் கேட்டுப் பெறாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
திமுக அரசு அமைந்த பிறகு, 5.2.2007 அன்று காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை அளித்தது. இந்தத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதன் பின்னர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவோ, இறுதித் தீர்ப்பில் பரிந்துரைத்தபடி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே சமயத்தில், 1991ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கிய போது, அதனை ஆறே மாதத்தில் மத்திய அரசிதழில் வெளியிட நான் உறுதியான நடவடிக்கை எடுத்தேன்.
கர்நாடகத்தில் உள்ள குடகு பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போது 17,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனினும், தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி விட வேண்டிய தண்ணீரைத் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. கர்நாடகத்திடம் நாம் பிச்சை கேட்கவில்லை. நமக்குள்ள உரிமையைத்தான் கேட்கிறோம் என்பதை கர்நாடக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை திமுக அரசின் முதல்வர் கருணாநிதிக்கு இருக்கிறது.
எனது ஆட்சிக் காலத்தில் காவிரி நீரைப் பெறுவதற்காக 4 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நான் நடத்தினேன். பிரதமர் தலைமையிலான, காவேரி பாசன நான்கு மாநில முதல்வர்களை உள்ளடக்கிய காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டுமாறு பலமுறை பிரதமரை வலியுறுத்தி இருக்கிறேன். பலமுறை அத்தகைய கூட்டங்கள் கூட்டப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெற்று இருக்கிறோம். ஆனால் கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் காவிரி நீரைப் பெறுவதற்காக கருணாநிதி எதையும் செய்யவில்லை.
காவிரியில் நமக்குள்ள உரிமையைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவரையும், பிரதமரையும் கருணாநிதி சந்திக்காதது ஏன்?. இந்த விவகாரத்தில் கடிதம் எழுதவே தயங்குகிறார் கருணாநிதி.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படியோ அல்லது இறுதித் தீர்ப்பின்படியோ கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்?.
நான் அறிக்கை வெளியிட்ட பிறகு கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு எதையும் கருணாநிதி செய்யவில்லை. அந்தக் கடிதம் எழுதி நான்கு மாதத்துக்கும் மேலாகி விட்டது.
கடிதத்துக்கு பதில் இல்லை என்றால், கர்நாடக முதல்வரிடம் தொலைபேசியில் பேச வேண்டும். அதற்கும் பதில் இல்லை என்றால் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பிரதமர் தலைமையில் கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் பலனில்லை எனில் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், கருணாநிதி இதில் எதையுமே செய்யவில்லை.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் 10 டி.எம்.சி. தண்ணீரையும், ஜுலை மாதம் 34 டி.எம்.சி. தண்ணீரையும், ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி. தண்ணீரையும், செப்டம்பர் மாதம் 40 டி.எம்.சி. தண்ணீரையும், அக்டோபர் மாதம் 22 டி.எம்.சி. தண்ணீரையும், அதாவது மொத்தம் 156 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட்டிருக்க வேண்டும்.
ஆனால் இறுதித் தீர்ப்பின் படி கர்நாடகம் நடக்கவில்லை. இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை என்ற வாதத்தை கர்நாடக அரசு வைக்குமேயானால், இடைக்காலத் தீர்ப்பையாவது கர்நாடகம் பின்பற்றியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
இப்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுவிட்டது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதனால் ரூ. 3,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடகத்திடமிருந்து தமிழகத்தின் சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரைப் பெற முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா சாகுபடி பாதிக்கப்படும் நிலையில், அதற்கான இழப்பீட்டை காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டை நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை தமிழக விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications