ராகுலை தாக்கிப் பேசிய சரத்யாதவை கூவத்தில் போட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: ராகுல் காந்தியை தாக்கிப் பேசிய சரத் யாதவை கூவத்தில் தூக்கிப் போடவேண்டும் என்றார் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
பீகார் மாநிலம் பதுவா நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய சரத்யாதவ், ராகுல் காந்தியை கடுமையாக தாக்கிப் பேசினார். "ராகுலுக்கு என்ன தெரியும்? மற்றவர்கள் எழுதித்தருவதை வாசித்து விட்டுப் போகிறார். அவரை தூக்கி கங்கை நதியில் வீச வேண்டும்" என்றார்.
அவருக்கு பதிலடியாக, சரத் யாதவை கூவத்தில் வீசவேண்டும் என்றார் இளங்கோவன்.
மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம். யுவராஜா தலைமையில் கடந்த 2-ம் தேதி நடைபயணம் தொடங்கியது. இதில் 150 இளைஞர் காங்கிரசார் கடந்த 28 நாட்கள் பயணத்தின் பிறகு ஈரோடு மாவட்டத்தை வந்தடைந்தனர்.
அவர்களுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடைபயணம் மேற்கொண்டுள்ளவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி எறிய வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார். புனித நதியில் தூக்கி எறிய வேண்டும என்று கூறியதில் இருந்து ராகுல் புனிதமானவர் என்று தெரிகிறது. ஆனால் அவ்வாறு சொன்னவரை கூவத்தில் தான் போட வேண்டும்.
ராகுல் இளைஞர்களுக்கு சிறந்த தலைவராகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறார். அவருக்கு பதவி ஆசையில்லை. தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அடிமையாக வாழ அவர்களுக்கு விருப்பமில்லை.
ராகுல் காந்தியின் பின் ஒரு பட்டாளமே வருகிறது. இந்த நடைபயணத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மக்களுக்கு காங்கிரஸ் மீது உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
ராகுல் காந்தி வழி நடத்தும் இந்த இளைஞர் காங்கிரஸால் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும். இந்த நடைபயணம் முடியும்போது தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் மக்கள் விரும்பிய ஒன்றாக இருக்கும்," என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications