கல்லூரி மாணவி, பிளஸ் டூ மாணவன் கடலில் மூழ்கி பலி
உடன்குடி: உடன்குடி அருகே நடந்த இரு வேறு சம்பவங்களில் பிளஸ் டூ மாணவன், கல்லூரி மாணவி கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
உடன்குடி கிறிஸ்டியா நகரத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் மகன் யோவான். இவர் உடன்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று இவரும், இவரது நண்பர்கள் 10 பேரும் தீபாவளி விடுமுறையையொட்டி கடலில் குளிக்க மணப்பாட்டுக்குச் சென்றனர்.
அங்கு கடலில் குளித்து வி்ட்டு யோவானின் நண்பர்கள் அனைவரும் கரையேறிவிட்டனர். அப்போது தான் யோவான் தங்களுடன் வரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் கடலுக்குச் சென்று தேடினர்.
இதில் அவர் கடலுக்குள் மூழ்கி மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு முதலுதவி செய்து உடன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதே போல் உடன்குடி அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜோஸ்வின் மகள் ஜெசி. சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வேனில் மணப்பாட்டிற்கு சுற்றுலா வந்தார். அங்கு அவர் கடலில் உறவினர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென எழும்பிய ராட்சத அலை ஜெசியை இழுத்துச் சென்றது.
உடனே அங்கு குளித்துக் கொண்டிருந்த உறவினர்கள் கூக்குரலிட்டனர். இதையடுத்து ஒரு சிலர் ஜெசியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையி்ல் இருந்த அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்தது. இந்த சம்பவம் உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications