மும்பை பள்ளிக் குழந்தைகளுடன் நடனமாடி ஒபாமா-மனைவி

நேற்று மும்பை வந்த ஒபாமா இன்று காலை பள்ளிக் குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். முதலில் தீபங்களை ஏற்றிய ஒபாமா தம்பதி பின்னர் குழந்தைகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தது.
மகாராஷ்டிர மீனவர்களின் நாட்டுப் புறப் பாடலுக்கு குழந்தைகள் 'கோலி' நடனமாடியபோது, ஒபாமாவின் மனைவி மிஷேலும் அவர்களுடன் இணைந்து நடனமாட ஆரம்பித்தார்.
இதை கையைத் தட்டி ரசித்துக் கொண்டிருந்த ஒபாமாவையும் குழந்தைகள் சிலர் கையைப் பிடித்து இழுத்து நடனமாட அழைக்கவே, சிறிதும் யோசிக்காமல் அவர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார் ஒபாமா.
நேற்று மும்பை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட மிஷேல், ரங் தே பாசந்தி படத்தின் பாடலுக்கு அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தாஜ் ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கி வெடிப்பு:
முன்னதாக நேற்றிரவு ஒபாமா தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷேலுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஹோட்டலுக்கு வெளியே திடீர் என்று துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் தயாள் கூறுகையில், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஏ. சௌத்ரி கையில் வைத்திருந்த துப்பாக்கியைத் தவறுதலாக அழுத்தியதால் அது வெடித்தது. இதில் சௌத்ரிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications
