'ஸ்பெக்ட்ரம்'-நாடாளுமன்றத்தில் நாளை சிஏஜி அறிக்கை தாக்கல்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா நேற்று பதவி விலகினார். இருப்பினும் இது போதாது, கூட்டு நாடாளுமன்றக் கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதுதொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடரவே, இன்று முழுமைக்கும் அவையை ஒத்திவைத்து துணைத் தலைவர் ரஹ்மான் கான் உத்தரவிட்டார்.
இதே நிலைதான் லோக்சபாவிலும். இன்று காலை அவை நடவடிக்கைகளை தொடங்க விடாமல் எதிர்க்கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடிய உறுப்பினர்கள் ஜேபிசி விசாரணை தேவை என்று கூறி கோஷமிட்டனர்.
இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் மீரா குமார் உத்தரவிட்டார்.
அவை மீண்டும் கூடும்போது பிரதமர் மன்மோகன் சிங், ராஜா விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்வார் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி 12 மணிக்கு அவை கூடியபோது பிரதமர் அவைக்கு வரவில்லை. மாறாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாள் முழுமைக்கும் லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ராசா மீதான மத்திய தணி்க்கை அதிகாரியின் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications