தமிழக அரசு ஊழியர்களின் ஜாதி விவரம் சேகரிப்பு
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஜாதி விவரங்களை சேகரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனத்துடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஜாதி விவரங்களை தருமாறு பிற்பட்டோர் ஆணையம் கேட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களின் ஜாதி விவரத்தை அனுப்பி வைக்குமாறு அனைத்துத் துறைகளுக்கும் தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் ஊழியர்களின் ஜாதி விவரங்கள் தனித் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப வைக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மற்றும் மதம் தொடர்பான விவரங்களை தொகுக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கென, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தனி குறியீட்டு எண்ணை குறிப்பிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் குறிப்புகளை அரசு அனுப்பி வைத்துள்ளது.
அரசு ஊழியர்களின் சாதி விவரங்களை மிகவும் துல்லியமாக சேகரித்துத் தரவேண்டும் என்று அனைத்து அரசுத் துறைத் தலைமை அலுவலகங்களுக்கும், தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தகவல் அனுப்பியுள்ளது.
சில துறையினர் அனுப்பிய விவரங்கள் துல்லியமாக இல்லாததால், அதை திருப்பி அனுப்பி, அதை சரிசெய்து மீண்டும் அனுப்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 19.7.1994-க்கு முன்பு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் என்று இருவகையாக ஊழியர்களை பிரித்து, அவர்களின் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை சேகரித்துத் தரும்படியும், தமிழக அரசு கோரியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு தலைமை அலுவலகங்களில் இப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்கள், அனைத்து விவரங்களையும் அனுப்பிவிட்டன. சில துறைகளிடம் இருந்து மட்டுமே விவரங்கள் வரவேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications