பிகாரில் இன்று இறுதிக் கட்ட தேர்தல்-24ல் ஓட்டு எண்ணிக்கை
பாட்னா: பிகார் சட்டசபைக்கு இன்று இறுதிக் கட்ட தேர்தல் நடக்கிறது.
இங்கு சட்டசபைத் தேர்தல் ஆறு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகியவை இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
தேர்தல் நடக்கும் 26 தொகுதிகளில் 18 தொகுதிகள் நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையே ஓட்டுப் பதிவு நடக்கும். மற்ற பகுதிகளில் 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கும்.
வரும் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று முற்பகலியே அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும்.
முடிவை தீர்மானிப்பது பெண்களே:
இதுவரை நடந்த 5 கட்டத் தேர்தல்களிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 50.70 சதவீதமும், பெண்கள் 54.85 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
கடந்த தேர்தலின் போது 47 சதவீத பெண்களே வாக்களித்திருந்தனர். இம் முறை அது 11 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ்குமார் பெண்களுக்கான நலத் திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications