8 கிலோ தங்கம் கொள்ளை-சிவகங்கை ரியல் எஸ்டேட் அதிபர் சிக்கினார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி அருகே பேருந்தை வழிமறித்து நகைக்கடை ஊழியர்களிடம் இருந்து 8 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த 28-9-2010ல் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங், சஜன்சிங் ஆகியோர் அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாசார்பட்டி அருகே வெம்பூரில் பேருந்தை சிவப்பு நிற கார் ஒன்று வழிமறித்தது.
அதில் இருந்து இறங்கிய 3 பேர் பேருந்தின் பின் இருக்கையில் இருந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேர் வைத்திருந்த 8 கிலோ தங்கம் மற்றும் ஒரு செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கு நகை கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தனிப்படையினர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை சென்றுள்ளனர்.
இது குறித்து டிஐஜி சண்முகராஜேஸ்வரன் கூறுகையில்,
தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தற்போது சிக்கியுள்ள நபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதற்கான முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications