தூத்துக்குடியில் கன மழை: 320 விசைப்படகுகள் மீ்ன்பிடிக்க செல்லவில்லை
தூத்துக்குடி: நடுக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் தூத்துக்குடியில் 320 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர் மழையால் காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பருவ மழை மற்றும் புயல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்துள்ளது. மீனவர்கள் கடந்த 15 நாட்களாகவே புயல் மற்றும் பருவ மழை காரணமாக சரியாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் கடலுக்குள் 45 முதல் 60 கி மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் நேற்று அதிகாலையில் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. ஆனால் தூத்துக்குடியில் இருந்து கிழக்கே நடுக்கடலில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக இருந்துள்ளது.
அதாவது மணிக்கு 70 கிமீ வேகத்திற்கும் அதிகமாகவும், சூறைகாற்று போன்றும் இருந்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் அதற்கு மேல் பயணிக்க முடியாமல் விசைப்படகுகளுடன் கரைக்குத் திரும்பினர்.
இதனால் 320 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் காய்கறிகள் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications