திமுக-காங். கூட்டணியை உடைக்க முயல்வோர் எண்ணம் பலிக்காது-கருணாநிதி
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முயல்வோர் எண்ணம் பலிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: கூட்டணியை விட்டு காங்கிரஸ் பிரிந்தால், அந்த கட்சிக்குத்தான் அதிக இழப்பு என்று நீங்கள் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசியதாக ஒரு சில நாளேடுகள் பெரிதாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளனவே?
பதில்: என்னுடைய பேச்சில் முதல் பகுதியை அந்த ஏடுகள் பெரிதாக வெளியிட்டு விட்டு, இரண்டாவது முக்கியமான பகுதியை அப்படியே மறைத்துள்ளன.
நான் வேலூரில் பேசும்போது, "திராவிட முன்னேற்ற கழகம் இங்கே கூட்டணிக்கு தலைமை வகிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால், ஏதேதோ பேசுகிறார்கள். அதைத் தட்டிக் கேட்கவும், அடக்கவும் டெல்லியிலே இருக்கின்ற தலைவர்கள், பெரியவர்கள் வரவேண்டியிருக்கிறது. அல்லது அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால், இங்கே இருக்கின்ற சில விஷமிகள், தூண்டிவிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தோடு இருக்கின்ற உறவை எப்படியாவது கெடுக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். அப்படி கெடுத்தால், இந்த உறவை துண்டித்தால், அது யாருக்கு நஷ்டம் என்றால் துண்டிக்கின்றவர்களுக்குத்தான் நஷ்டமாகும். இன்னும் சொல்லப்போனால், துண்டிக்கின்றவர்களுக்கும், துண்டிக்கப்படுகின்றவர்களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம்.
ஏனென்றால் நாம் இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள்'' என்றுதான் பேசியிருக்கிறேன்.
முரசொலியில் இந்த என்னுடைய பேச்சு முழுமையாக வெளியாகியிருக்கின்றது. ஆனால் இந்த பேச்சின் பின் பகுதியை விட்டு விட்டு காங்கிரசுக்குத்தான் இழப்பு என்று நான் பேசியதைப் போல செய்தி வெளியிட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையே பூசலை உண்டாக்க எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
கேள்வி: பெரு மழை காரணமான வெள்ள நிவாரணப் பணிகளில் ஆட்சியாளர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாக "தீக்கதிர்'' நாளேடு தலையங்கம் எழுதியிருக்கிறதே?
பதில்: தலையங்கத்தை முடிக்கும் போது "தீக்கதிர்'' அவ்வாறு எழுதியிருந்த போதிலும், நிவாரணப் பணிகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது என்றும், வெள்ளப் பாதிப்பு பார்வையிடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
வெள்ள நிவாரணப் பணிகளில் இந்த அரசு அறிவிப்புடன் நின்றுவிடவில்லை. கடுமழை பெய்யத் தொடங்கிய அன்றே தலைமைச் செயலகத்திலிருந்து இல்லம் சென்ற நான் மதிய உணவு அருந்துவதற்கு முன்பாக என் கைப்பட எழுதிய அறிக்கையில் அமைச்சர்களையும், உள்ளாட்சித்துறை அலுவலர்களையும் அரசு அலுவலர்களோடு நிவாரணப் பணியிலே உடனடியாக ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
23-ந் தேதி வெளியிட்ட அறிக்கையினைத் தொடர்ந்து 25-11-2010 அன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், வேளாண்மைத் துறை ஆணையர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளர் ஆகியோரை அழைத்து வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்தேன்.
பெருமழையின் காரணமாக தீக்கதிர் தலையங்கத்திலே குறிப்பிட்டிருப்பதைப் போல, தமிழகத்திலே உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள் பெருமளவுக்கு நிரம்பி வருவது பற்றியும் பேசப்பட்டது. பயிர்கள் நீரில் மூழ்கியது பற்றி விவாதிக்கப்பட்டு, நீர் வடிந்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்கள். இன்றைய தேதி வரை உயிரிழந்த 103 பேர்களுடைய குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியினை உடனடியாக வழங்கவும் கூறப்பட்டு, அந்த நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக உயிரிழந்த கால்நடைகளுக்கான நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசு வெறும் பார்வையிடல், அறிக்கை என்ற அளவோடு நில்லாமல் செயல் அளவிலும் நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டு வருகின்றது.
24-ந் தேதியன்று நடைபெற்ற வேளாண்துறை அலுவலர் மாநாட்டிலே நான் பேசும்போது கூட- இந்த கடுமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு அவர்கள் செலுத்த வேண்டிய நிலவரியைச் செலுத்த தேவையில்லை என்று அறிவித்திருக்கிறேன்.
மார்க்சிஸ்ட் இதழ் தலையங்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ள மதுரை மாடக்குளம் கண்மாய் உபரி நீர் கிருதுமால் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள் பயன் பெற்றுள்ளன என்ற விவரமும்; வைகை மழைநீர் பார்த்திபனூர் அணைக்கட்டிலிருந்து பரளியாறு வழியாக கமுதி, முதுகுளத்தூர் பகுதிகள் பயன்பெறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவரம் அந்த இதழுக்கு தெரிந்திருந்தால் தலையங்கத்தில் அரசை குறை கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
நேற்றையதினம் காலையிலே கூட வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளரிடமும், அதிகாரிகளிடமும் பேசி வெள்ளச்சேத விவரங்கள் பற்றி மாவட்ட ஆட்சி தலைவர்கள் உடனடியாக தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். பெரும் மழையின் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும், உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வரையிலும், தேவையான இடங்களில் உணவு வழங்கியும், தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், குடிசைகளை இழந்தோருக்கு- முழுமையான அளவில் குடிசைகள் சேதம் அடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் என்பதை 5 ஆயிரம் ரூபாயாகவும்; பகுதியாக குடிசைகள் சேதமடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கபட்டு வந்த ஆயிரம் ரூபாய் என்பதை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.
இந்த பெருமழையினால் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளேன்.
கேள்வி: வேலூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளைப் பற்றி உருக்கமாகப் பேசியிருந்தீர்கள். அந்த கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் அந்த பேச்சில் அக்கறை செலுத்தாவிட்டாலும், அந்த கட்சியின் தொண்டர்கள் உண்மையிலேயே தங்கள் கருத்தை எண்ணிப்பார்ப்பார்கள். கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: நான் அவ்வாறு நினைக்கிறேனோ இல்லையோ! கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி நாளிதழில் நேற்று வெளி வந்திருந்தது.
அதில், "கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கம் குறைந்துவிட்டது. தொண்டர்களும் பொது மக்களிடம் நெருங்கிப் பழகுவது இல்லை. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியாகவே இருப்பதால் கம்யூனிஸ்டு தலைவர்கள் பலர் மக்களிடம் ஆணவப் போக்கில் நடந்து வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இது கம்யூனிஸ்டு தலைவர்கள் செய்துள்ள பெரிய தவறு. இதனை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இதுவே கடந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. மக்களை மதிக்காதவர்கள் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகிவிடுவது நல்லது'' என்று தன் உள்ளத்து வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கேள்வி: பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், நிருபர்கள் போன்றவர்களுக்கு நீங்கள் ஆட்சியிலே இருந்த காலத்தில்தான் ஏராளமான சலுகைகளையும், உதவிகளையும் செய்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் தாக்கி எழுதுவதையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்களே, அதற்கு என்ன காரணம்?
பதில்: நான் மிக மிகச் சாதாரணமான, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஐந்தாவது முறையாகவும் பதவிப் பொறுப்பிலே இருக்கிறேன். ஏழையெளிய மக்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு நன்மைகளைச் செய்து வருகிறேன் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் காரணம்!
குடிசைகளிலே உள்ளவர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தருவேன் என்பதையும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதையும், கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதையும், 108 அவசர சிகிச்சை ஊர்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதையும், புதிதாக தலைமைச் செயலக வளாகத்தை உருவாக்குகிறேன் என்பதையும், அண்ணா நூற்றாண்டு நினைவாக ஆசியாவிலேயே பெரிய நூலகம் அமைத்திருப்பதையும், செம்மொழி மாநாடு என்றும், செம்மொழி பூங்கா என்றும் வருவதையெல்லாம் அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்!
என்னைத் தாக்கி அவ்வாறு தொடர்ந்து எழுதி வருகின்ற அந்த பத்திரிகையாளர்களின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதி, அதை ஒரு முறை படித்துப்பாருங்கள்! அவர்கள் ஏன் அவ்வாறு என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் எழுதுகிறார்கள் என்பது உங்களுக்கே புரியும்!
கேள்வி: போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து சி.பி.எம். மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
பதில்: அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட்கள் கட்சியின் ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. சங்கம் தோற்றுவிட்டது என்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை, வருந்துகிறேன் என்று வேலூர் கூட்டத்தில் பேசினேன். அது என்னுடைய பண்பு. அந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிக்கு உள்நோக்கம் கற்பித்து கம்iனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கூறுகிறார் என்றால் அது அவருடைய பண்பு. இரண்டையும் போக்குவரத்து தொழிலாளர்கள் புரிந்து கொண்டால் போதும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications