ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நாடாளுமன்றம் நடைபெறும்-பாஜக
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சையத் ஷானவாஸ் ஹூசேன் கூறுகையில், ஜேபிசி விசாரணையைப் பார்த்து காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது. இந்த விசாரணையால் தனது ரகசியங்கள் வெளியாகி விடும் என காங்கிரஸ் பயப்படுகிறதா. ஜேபிசி விசாரணையை மட்டுமே நாங்கள் ஏற்போம். இல்லாவிட்டால் நாடாளுமன்றம் இயங்க முடியாது.
ஒரு தனி நபரின் ஊழல் பாதையில் அரசு நடைபோடுவதை ஏற்க முடியாது. ஊழல்வாதியைக் காக்க அரசு துடிப்பது வேதனையானது, கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
நவம்பர் 9ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால் இதுவரை ஒரு நாள் கூட ஒரு அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் நாடாளுமன்றம் முடங்கிப் போயுள்ளது.
எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை பிரணாப் முகர்ஜி மூலம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஒரு பயனும் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications
