'கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: "கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்'' என்பதற்கேற்ப ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னாலே அது உண்மையாகி விடும் என்பதை போல, பழிசுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இன்று அம்பேத்கர் நினைவு நாள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகின்ற இயக்கம் திமுக இந்த நேரத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் நினைவை போற்றும் வகையில் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் ஒரு சிலவற்றைக் கூற முடியுமா?

பதில்: 1972ம் ஆண்டிலேயே வியாசர்பாடியில் அம்பேத்கர் பெயரில் புதிய கலைக்கல்லூரி- மைலாப்பூர் ஹாமில்டன் பாலத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர்- 1989ம் ஆண்டில் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் உள்ள மரத்துவாடா பல்கலைக்கழகத்திற்கு "அம்பேத்கர் பல்கலைக்கழகம்'' எனப் பெயரிட வேண்டுமென, அங்கே போராட்டம் நடந்தபோது, கழகத்தின் சார்பில் மராட்டிய மாநில ஆளுநருக்கு ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டு, அதன் காரணமாக மரத்துவாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது,

1990ம் ஆண்டு கழக அரசின் சார்பில் ஆணையிட்டு, அம்பேத்கர் நூற்றாண்டு விழா- சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர்- 20-9-1997 அன்று அம்பேத்கர் பெயரில் சென்னையில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்- 2006-07 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, "அம்பேத்கர்'' திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டமைக்காக 3-12-2010 அன்று ரூ.10 லட்சத்துக்கான காசோலை- 1997-ம் ஆண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் முதலீட்டில் அம்பேத்கர் பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தைச்சேர்ந்த மாணவ, மாணவியர்க்குப் படிப்பு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

அம்பேத்கர் போற்றிய லட்சியமான சமத்துவம்- சகோதரத்துவம் தழைத்திடவும், நிலைத்திடவும் தமிழகமெங்கும் "தலித்'' மக்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் இணக்கத்தோடு வாழ்ந்திட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி, ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கும் திட்டம் 1998ல் கழக ஆட்சியில் தொடக்கம்,

ரூ.4 கோடி செலவில் 55 அடி விட்டத்துடன் கூடிய அரைக்கோள வடிவத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தைக் கட்டி 10-6-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது

அம்பேத்கர் வருகை தந்த இடத்தில் அவருடைய நினைவாக ரூ.42 லட்சம் செலவில் புதிய பூங்கா- சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 21-4-2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு (அரசின் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி) என்று தொடர்ந்து அம்பேத்கர் புகழைப் பரப்பும் முயற்சியில் கழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அம்பேத்கர் பெயரில் இவ்வளவு செய்ததையன்னியில், அவர் எந்தத் "தலித்'' சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டாரோ, உழைத்தாரோ அவரின் அந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு கழக அரசு பதவியிலே இருந்த காலத்தில் எல்லாம் அந்தச் சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காக செய்த சாதனைகள் சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இருந்த 16 சதவிகித இடஒதுக்கீட்டினை 1971ம் ஆண்டில் கழக ஆட்சியிலேதான் 18 சதவிகிதமாக உயர்த்தி- மீண்டும் 1990ல் கழக ஆட்சியிலேதான் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து, பழங்குடியினருக்கு மட்டும் தனியே ஒரு விழுக்காடு என்றும், ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு என்றும் அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

-ஆதிதிராவிட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் நூற்றாண்டு விழா 1990ம் ஆண்டில் கழக ஆட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டதோடு, சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் சமூக கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டது.

- மதுரையில் தியாகி கக்கன் சிலையை கழக அரசின் சார்பில் 31-8-1997ல் நான் திறந்து வைத்ததோடு, அவர் பிறந்த தும்பைப்பட்டியில் அவர் பெயரால் நினைவு மண்டபம் ஒன்றும் எழுப்பியிருக்கிறேன்.

-கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய ஆதிதிராவிட வகுப்பைச்சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு கவர்னகிரியில் வீடுகளைக் கட்டிக்கொடுத்து, "வீரன் சுந்தரலிங்கம் நகர்'' என்று பெயர் சூட்டப்பட்டது.

- தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து என் மகன் மு.க.அழகிரிக்கு பெண் எடுத்தது மட்டுமல்ல- என் பேத்தியை அந்த சமுதாயத்தை சேர்ந்த மணமகனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.

-தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்த ஒருவரை மட்டுமே நியமித்துக் கொண்டிருந்த முறையை மாற்றி என்னுடைய அமைச்சரவையில்தான் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அமைச்சர்களாக நியமித்ததோடு, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவை துணைத் தலைவராகவும் நியமித்தேன்.

-இவைகள் தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சலுகைகள், விடுதிகள், திருமண நிதியுதவிகள் என்று பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை அவர்களே அறிவார்கள்.

கேள்வி: முருங்கை மரம் இருந்தால் இலவச மின்சாரம் கிடையாது என்று அதிகாரிகள் திடீர் நிபந்தனை விதித்திருப்பதாக நாளேடு ஒன்று கட்டம் கட்டி பெரிதாக செய்தி வெளியிட்டுள்ளதே?

பதில்: நெல், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கழக அரசின் சார்பில் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறதே தவிர, முருங்கை, கொய்யா, சப்போட்டா, முந்திரி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு எந்தக் காலத்திலும் இலவச மின்சாரம் அளிப்பதில்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், திடீரென்று ஏதோ அதிகாரிகள் இந்த ஆட்சியிலே இலவச மின்சாரம் வழங்கிட முருங்கை வளர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதைப் போல அந்த இதழில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

பத்திரிகை ஆசிரியர்கள் அல்லது செய்தியாளர்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குவதற்குப் பதிலாக உண்மை என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்பின்னர் வெளியிடுவது அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.

கேள்வி: சென்னை விமான நிலையத்தில் அதிமுக தலைவிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எதற்காக?

பதில்: கொடநாட்டில் இத்தனை நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட நிலையிலேயே, அன்றாடம் விடாமல் அவர் கைப்படவே அறிக்கைகளை தொடர்ந்து எழுதி, எந்தெந்த கிராமத்தில் குடி தண்ணீர் வரவில்லை, சாலைகளிலே பழுது உள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து, அதற்காக தொண்டர்களை அனுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகப் பாராட்டி வரவேற்பு கொடுத்திருக்கலாம். ஆனால் அது அவர்களுடைய உள்கட்சி பிரச்சனை. ஆனால் வந்ததும் வராததுமாக மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்காக ஆ.ராஜாவை இன்னும் கைது செய்யவில்லையே என்று கேட்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பின்னர் ஜெயலலிதா ஆணையின் பேரில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்றா ஜெயா கூறினார்?

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன?

பதில்: உண்மைதான். ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சனையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள். ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே என்ன நடைபெற்றது என்ற விவரத்தை நாடாளுமன்றத்திலே விவாதிக்கலாம் என்று ஆளுங்கட்சி சார்பிலே பலமுறை அழைத்தபோதும், விடாமல் கூட்டுக்குழுவே தேவையென்று விடாப்பிடியாக அவையை நடத்தவொட்டாமல் செய்தார்கள்.

தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையிலே கூட- அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்தத் தொகை உத்தேசமாகக் கணக்கிடப்பட்டதாகும் என்றும் தான் உள்ளது என்றும், நட்டத்தொகை விரைவில் துல்லியமாக கணக்கிடப்படும் என்றும் தற்போது அந்தத் துறையின் பொறுப்பையேற்றுள்ள கபில் சிபல் பேட்டியிலே சொல்லியிருக்கிறார்.

மேலும் கபில்சிபல் தனது பேட்டியில், "அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக தவறான தகவல்கள் அளித்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதுபோல் ஒதுக்கீட்டை பெற்று அதைப் பயன்படுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வாறு செய்தால், தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இழப்புத் தொகை கணிசமாகக் குறைவதற்கு வழி உள்ளது.

இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராஜா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும்- நேற்றைய "எக்கனாமிக் டைம்ஸ்'' வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை'' என்று எழுதியிருக்கின்றது.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முடியாமல், தீர்ப்பும் வராத நிலையில் அவசரப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜா மீது குற்றம் கூறுவதாகவும் அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.

"கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்'' என்பதற்கேற்ப ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னாலே அது உண்மையாகி விடும் என்பதை போல பழிசுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+