தமிழக ஆளுநர் மாளிகையில் அரசு மருத்துவமனை கட்ட தடை
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்தில் அரசு மருத்துவமனை கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்ட இருப்பதாகவும், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள ராஜ்பவன் கில்பர்ட் ரோட்ரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்து. அது பெரியவர்கள் தங்கிச்செல்லும் பகுதி என்பதால் முன்பு கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு ஏராளமான மரங்கள், சிறு செடிகள், விலங்குகள், பறவைகள் உள்ளன. நல்ல வேட்டைக்காரனாக இருந்த கில்பர்ட் இறந்த பிறகு, அந்த இடம் பேய் பங்களா போல் சில ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது.
1821-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இங்கு வந்து அந்த இடத்தை வாங்கி 1,250 ஏக்கர் விரிவாக்கம் செய்தது. அப்போது கவர்னர் பங்களா, அரசு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை வனச் சட்டப்படி 1,250 ஏக்கர் நிலப்பரப்பையும் தடை செய்யப்பட்ட வன மண்டலமாக 1910-ம் ஆண்டு, ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
சுதந்திரம் அடைந்த பிறகு அப்போதிருந்த அரசால் அந்த இடம் கவர்னர் மாளிகையாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள இடத்தில் 9.25 ஏக்கர் காந்தி மண்டபத்துக்கும், 9 ஏக்கர் புற்றுநோய் மையத்துக்கும், 338 ஏக்கர் ஐ.ஐ.டி.க்கும், 625 ஏக்கர் தேசிய பூங்கா அமைப்பதற்கு வழங்கப்பட்டது.
காமராஜர் நினைவிடத்துக்கு 6 ஏக்கர், குருநானக் கல்லூரிக்கு சில ஏக்கர், தேசிய பூங்காவுக்கான பாம்பு பண்ணை, குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கு மேலும் 88 ஏக்கர் என பல ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
தற்போது அந்த வனப்பகுதியில் பல காங்கிரீட் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. சென்னைக்கு அதிக அளவு பிராணவாயு உற்பத்தியாகும் இடம் இது ஒன்றுதான். 130 வகையான பறவைகள், 350 மர வகைகள், 60 வகையான வண்ணத்துப் பூச்சிகள், பலவகை அரிய மான்கள், நரிகள், ஆமை இனங்கள் இங்கு உள்ளன.
இது சுற்றுப்புறசூழலின் உறைவிடமாக திகழ்கிறது. ஏற்கனவே பல அமைப்புகளை உருவாக்குவதற்காக நிலங்களை வழங்கி, கவர்னர் மாளிகை தற்போது குறுகியுள்ளது.
இந்த நிலையில் 4 ஏக்கர் நிலப்பரப்பை மருத்துவமனை அமைப்பதற்கு வழங்குவதாக கூறப்பட்டு உள்ளது. இது அமைந்தால், சுற்றுப்புற சூழலுக்கு கேடு ஏற்படும். மருத்துவமனைக் கழிவுகளால் நீர், காற்று, மண் மாசுபடும். இதனால் வன விலங்குகள், தாவரங்கள் பாதிப்படையும்.
சென்னையில் இதுபோன்ற மருத்துவமனையை அமைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளன. எனவே சென்னையின் சுவாசப் பையான கவர்னர் மாளிகையின் வனப்பகுதியை கெடுத்துவிடக்கூடாது.
மருத்துவமனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கவர்னரின் செயலாளருக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு ஆஸ்பத்திரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அதுவரை ராஜ்பவனில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications