இறக்குமதி அதிகரிப்பு: வெங்காயம் விலை ரூ 60 ஆகக் குறைந்தது!

பாகிஸ்தானிலிருந்து வெங்காய இறக்குமதி அதிகரிக்க ஆரம்பித்ததால், வெங்காயம் விலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் வரத்து அதிகரித்தால் பழையபடி ரூ 30க்குள் விற்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், சபரிமலை சீசன் வேறு வந்ததால், நிறைய பேர் அசைவ உணவை கைவிட்டு, சைவ உணவை நாடத் தொடங்கினார்கள். இதனைத்தொடர்ந்து, காய்கறி விலை மேலும் அதிகரித்தது.
இந்த ஆண்டு உற்பத்தி குறைந்த சமயத்தில், வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால், வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்தது. மழைக்காலம் என்பதால் வெங்காயம் அதிக அளவு அழுகி வீணாகிவிட்டது.
காய்கறி வரலாற்றிலேயே எந்த காய்கறியும் விற்காத விலையான கிலோ ரூ.100- என்ற உச்சத்தைத் தொட்டது வெங்காயம். இதற்கு முன்னர், வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் வெங்காயம் கிலோ ரூ.35 வரை விற்றதுதான் அதிகபட்ச விலையாக இருந்து வந்தது (அன்றைக்கு சாதாரணமாக கிலோ ரூ 5-க்கு விற்கப்பட்டது).
வெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு மும்முரமானது. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியும் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மும்பை வழியாக வந்ததால், அவை மராட்டியம் மாநிலத்திலேயே முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டது. இதனால், மராட்டியத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானபோது, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 40 லாரிகளில் வெங்காயம் வந்தன.
தற்போது, மராட்டியத்தில் இருந்து கூடுதலாக வெங்காயம் வருவதால், தினமும் சென்னைக்கு 60 லாரிகளில் வெங்காயம் வருகின்றன. வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, வெங்காயம் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று ஒரு கிலோ மராட்டிய வெங்காயம் ரூ.60 ஆகவும், ஆந்திரா, கர்நாடகா வெங்காயம் கிலோ ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்திற்கு வெங்காய வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் பழையபடி ரூ 30-க்குள் விலை வந்துவிடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications