முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் விளைவித்தால் கேரளா மீது பொருளாதார முற்றுகை-வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: கேரள மக்களுக்குக் காய்கறி, அரிசி, பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம்தான் அனுப்புகிறது. முல்லைப் பெரியாறு அணைக்குச் சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்ல விடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என்று கேரளாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பென்னி குயிக் அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்ல விடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடப்படும் என கேரள அரசை எச்சரிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசன வசதியும், 5 மாவட்ட மக்களுக்குக் குடி நீர் வசதியும் வழங்கும் முல்லைப் பெரியாறு அணையை, 1886ம் ஆண்டில், அன்றைய திருவிதாங்கூர் அரசுடன் தமிழ்நாடு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியியல் மேதை பென்னி குயிக்கும், அன்றைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகள் பலரும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு எந்த பூகம்பத்துக்கும் ஈடு கொடுக்கக் கூடிய வலிமையான முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார்கள்.

1979ம் ஆண்டில், கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு நீரை அங்கு கொண்டு செல்வதற்காக, அந்த அணை உடைந்து விடும் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லிப் பிரச்சனையை உருவாக்கியது. இதன் விளைவாக, 152 அடி உயரத்துக்கு முல்லைப் பெரியாறில் நீரைத் தேக்க தமிழகம் உரிமை பெற்றிருந்தும், அணையை வலுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு, தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

இதையடு்த்து பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணை வலிமையைப் பரிசோதனை செய்ய பிரார் தலைமையில் ஒரு நிபுணர் குழுவும், மித்தல் தலைமையில் ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்களும் தீவிர ஆய்வை மேற்கொண்டு, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று அறிக்கை தந்தன.

அதிமுக அரசு தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, ஆதாரங்களை முன்வைத்ததால் உச்ச நீதிமன்றம் 2006 பிப்ரவரி 27ல் முல்லைப் பெரியாறில் முதல்கட்டமாக தமிழகம் 142 அடிக்குத் தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பின்னர் 145 அடி அளவிலும், அதன் பின்னர் 152 அடி வரையிலும் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதில் கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் கேரள சட்டமன்றம் 2006 மார்ச் 18ல் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதில், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்ட அளவைத் தீர்மானிக்கவும், எந்த அணையையும் செயலிழக்கச் செய்து உடைக்கவும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து, அதிமுக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ஆனால் திமுக அரசில், முல்லைப் பெரியாறு பிரச்சனையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கேரள அரசு திட்டமிட்டே வழக்கை இழுத்தடிக்க 33 முறை வாய்தா வாங்கியபோது, ஒருமுறைகூட தமிழக வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை.

கடைசியாக வழக்கின் தீர்ப்பு மீண்டும் தமிழகத்துக்கே நியாயம் வழங்கும் என்ற நிலையில், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தபோது, தமிழக முதல்வரின் யோசனையின்பேரில், தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு எழுத்து மூலமாகவே ஒப்புதல் கொடுத்தார்.

இதன் விளைவாகவே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணை வலிமையை ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் தலைமையில் புதிதாக ஒரு குழுவை அமைத்தது.

குழு அறிவிப்பை வரவேற்ற முதல்வர் கருணாநிதி, இரண்டு நாட்கள் கழித்து, அந்தக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று திமுக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டுவிட்டு, பின்னர் மத்திய அரசின் விருப்பத்தை ஏற்று குழுவில் தமிழக அரசு பங்கேற்கும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் கேரள அரசு, ஏற்கனவே பென்னி குயிக் கட்டியுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கு ரூ. 600 கோடி ஒதுக்கிவிட்டது.

தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு, கடந்த 20ம் தேதி, தமிழகத்தின் தேனி மாவட்டத்துக்கு வந்தபோது, அக்குழுவின் கேரள அரசின் பிரதிநிதியான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

தேனியில் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து முறையிடவோ, மனு கொடுக்கவோ தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள், குறிப்பாக 5 மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸும், சட்டமன்ற உறுப்பினர்களும் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர் எவரும் முதல்நாள் வரவும் இல்லை.

ஆனால், கேரள எல்லைக்குள் குழுவினர் சென்றபோது கேரள அமைச்சர் பிரேமச்சந்திரனும், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமோல் அவர்களும், மற்ற கேரள மாநில விவசாயிகளும் குழுவினரை வரவேற்றுப் பொன்னாடைகள் போர்த்தினர். பரிசுப் பொருள் அடங்கிய ஒரு பெரிய பேழையை நீதிபதி ஆனந்திடம் தந்தனர்.

புதிய அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை இந்த ஐவர் குழு பார்வையிடவும் கேரள அரசு ஏற்பாடு செய்தது; குழுவும் பார்வையிட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்க் கசிவு இல்லை என்று குழுவினருடன் வந்த மத்திய நீர்வளத்துறை ஆணைய நிபுணர் மேத்தா நிருபர்களிடம் கூறினார்.

தாங்கள் திட்டமிட்டபடி புதிய அணை கட்டப் போவதாகவும் வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே, பென்னி குயிக் கட்டிய அணை கடல் மட்டத்திலிருந்து 2,869 அடி உயரத்தில் அமைந்ததாகும். கேரளம் கட்டப் போகிற அணை 2,629 அடி உயரத்தில்தான் அமையப் போகிறது. எதிர்காலத்தில் கேரள அரசே நினைத்தாலும் பள்ளத்தில் அமையும் புதிய அணையிலிருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் கொடுக்க முடியாது.

பென்னி குயிக் கட்டிய நமது அணையை உடைப்பதற்கு கேரள அரசு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சட்டமும் போட்டுள்ளது. இந்த விபரீதம் நேர்ந்து விட்டால் தென் தமிழ்நாடு பாலைவனமாக மாறும்.

கேரள மக்களுக்குக் காய்கறி, அரிசி, பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம்தான் அனுப்புகிறது. பென்னி குயிக் அணைக்குச் சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்ல விடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என கேரள அரசை எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+