ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது இதுகுறித்து தெரிவித்திருந்தார் மன்மோகன் சிங். ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளிக்குப் பதிலடியாக இது கருதப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த விருப்பத்தை வெளியிட்டு முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார்.
2 ஜி விவகாரம் பற்றி முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொது கணக்கு குழு ஆய்வு செய்கிறது. பொதுக்கணக்கு குழு முன் தலைமை தணிக்கை அதிகாரி வினோத்ராய் ஆஜரானார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கை அறிக்கை குறித்து விளக்கமளித்தார்.
இந்த நிலையில், பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவில் மொத்தம் 22 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஜோஷிக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் முடிவெடுப்போம்-ஜோஷி
பிரதமர் அனுப்பிய கடிதம் குறித்து முரளி மனோகர் ஜோஷி கருத்து தெரிவிக்கையில், பிரதமர் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிப்பதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொருத்தமான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
லோக்சபா விதிமுறைப்படி, ஒரு அமைச்சரை நேரில் வந்து ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறோ அல்லது விளக்கம் அளிக்குமாறோ கோர முடியாது. இருப்பினும் தேவைப்பட்டால், ஒரு அமைச்சரிடம் சாதாரண முறையில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கமிட்டித் தலைவர் பேசி தகவல் சேகரிக்கலாம்.
தற்போது வரலாறு காணாத வகையில், பிஏசி கமிட்டி முன்பு ஆஜராகத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரதமர். எனவே இதுதொடர்பாக பொதுக் கணக்குக் கமிட்டியின் நடைமுறைகளில் லோக்சபா சபாநாயகர் மாற்றம் செய்து அதற்கு வழி வகுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications