அமைச்சரவையை மாற்றியமைக்க சோனியா, மன்மோகன் திட்டம்-கிருஷ்ணா மாற்றப்படுகிறார்

படு பயங்கரமான ஊழல் புகார்கள் அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய நிலையில் காங்கிரஸ் கட்சி தனது பெயரையும், ஆட்சியின் பெயரையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு கட்சியையும், ஆட்சியையும் ஊழல்கள் பாடாய்ப்படுத்தி விட்ட நிலையில் 2011ம் ஆண்டை பிரச்சினையின்றி தொடர திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். அதற்கு வசதியாக கட்சியிலும், அமைச்சரவையிலும் பெருமளவில் மாற்றங்களைக் கொண்டு வர சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மாற்றங்கள் இந்த மாத இறுதிக்குள் இடம் பெறும் என்று தெரிகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்பப்படவுள்ளார். தற்போது அவர் அமைச்சராக மட்டுமல்லாமல், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் உள்ளார். அவரை தென் மாநில காங்கிரஸ் நலனைக் கண்காணிக்கும் பொறுப்பில் முழு நேரமாக அமர்த்த சோனியா திட்டமிட்டுள்ளாராம்.
தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குலாம் நபி ஆசாத்தை ஆந்திர மாநில காங்கிரஸைக் கவனிக்கும் பொறுப்புக்கு அமர்த்தவுள்ளதாக தெரிகிறது.
அதேபோல அம்பிகா சோனியும் மீண்டும் கட்சிக்குப் பணிக்குத் திரும்பவுள்ளார். அதேசமயம், பீகார் மாநிலப் பொறுப்பை கையில் வைத்துள்ள அமைச்சர் முகுல் வாஸ்னிக்கிடமிருந்து அப்பொறுப்பு பறிக்கப்படவுள்ளதாம்.
மேலும், தற்போது தொலைத் தொடர்புத்துறை உள்பட சில முக்கியத் துறைகளை கவனித்து வரும் கபில் சிபலுக்குப் பணிப் பளுவைக் குறைக்கும் வகையில் அவரிடம் உள்ள சில துறைகளை வேறு அமைசசர்களுக்குக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நிரந்தரமாக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய மாற்றமாக எஸ்.எம்.கிருஷ்ணா வசம் உள்ள வெளியுறவுத்துறையைப் பறித்து அதை அனந்தசர்மாவிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதாம்.
உள்துறை, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர்களும் கூட மாற்றப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications