திண்டுக்கல்லில் ரூ. 3 கோடிக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தம்பி

கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்தபோது அவரது மகள், மருமகன், மாமியார் ஆகியோர் பெருமளவில் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணன் தம்பி பாஸ்கரன் மீது புதிய சொத்துக் குவிப்புப் புகார் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கேரள டிவி சானல் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 60 ஏக்கர் பரப்பளவுக்கு பாஸ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணை, பாஸ்கரன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயர்களில், ஐந்து தனித் தனி கிரையமாக செய்யப்பட்டு ஆத்தூர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது இதை ரூ. 22 லட்சத்துக்கு வாங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போதைய இதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.
இது போக பாஸ்கரனுக்கு கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் வீடுகளும் உள்ளன.
பாஸ்கரன் அரசு வக்கீலாக உள்ளார். அவரது மனைவி ஓய்வு பெற்ற நீதித்துறை நடுவர் ஆவார்.
இதுகுறித்து பாஸ்கறன் கூறுகையில், இந்தப் புகார் அபத்தமானது. எங்களது சேமிப்பை வைத்துதான் அந்தப் பண்ணையை வாங்கினோம். தனியார் வழக்குகளிலும் நான் ஆஜராகி வருகிறேன். அதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. எனவே வருமானத்திற்கு மீறிய வகையில் நான் சொத்துக்கள் வாங்கவில்லை.
பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து ஏன் இப்போது பெரும் பிரச்சினையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கமாக இருக்க முடியும்.
மீடியாக்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், நாங்கள் சொத்தே வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள் போல. எங்களது மூதாதையர்கள் நிலக்கிழார்களிடம் சிக்கி அடிமைகளாக இருந்ததைப் போல நாங்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல.
ஒட்டுமொத்த தலித் சமுதாயத்தையே அவமதிப்பது போல இந்த செய்திகள் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications