மீனவர் சுட்டுக் கொலையால் தமிழகத்தில் கொதிப்பலை-பிரதமருக்கு கருணாநிதி அவசர தந்தி

தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வரும் நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர் பாண்டியனை கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது சிங்கள காவாலிப் படை. இந்த செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் மன வேதனையையும், அதிருப்தியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய, பாண்டியனுடன் இருந்த மீனவர் மணிவேல் கூறுகையில், நேற்று காலை 7 மணிக்கு நாங்கள் கடலுக்குள் சென்றோம். அப்போது மாலை 5 மணியளவில் சிங்களப் படையினர் அங்கு வந்தனர். வந்த வேகத்தில் எங்களது படகை நோக்கி சரமாரியக சுட ஆரம்பித்தனர். இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் சிங்களப் படையினர் அங்கிருந்து போய் விட்டனர். நாங்கள் பாண்டியனின் உடலுடன் கரைக்கு விரைந்தோம் என்றார்.
கடும் கோபத்தில் கருணாநிதி
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியும் இந்த அக்கிரமச் செயலால் கொதிப்படைந்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று அவசர கடிதம் ஒன்றை தந்தி மூலம் அனுப்பியுள்ளார்.
உடனடியாக பிரதமர் தலையிட்டு இந்த அக்கிரமச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர் கோரியுள்ளார்.
தனது கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
உடனடியாக இதுகுறித்து இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச வேண்டும். இலங்கை கடற்படையின் கொலை வெறி அட்டகாசம் அளவுக்கு மீறி போய்க் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம், அவசரம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று சட்டசபையில் இந்த விவகாரத்தை அதிமுக எழுப்பியது. அதிமுக உறுப்பினர்கள் பேசுகையில், தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் கொலை செய்யும் செயல்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் மாநில அரசும் சரி,மத்தியஅரசும் சரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications