சட்டசபையில் சென்னை மாநகராட்சி விரிவாக்க மசோதா தாக்கல்-அதிமுக எதிர்ப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்துவதற்கான மசோதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல்செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக தெரிவித்தது.
சென்னை மாநகராட்சி தற்போது சுமார் 176 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. புறநகர் பகுதியில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன.
அம்பத்தூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மதுரவாயல், ஆலந்தூர், உள்ளகரம் புழுதி வாக்கம், வளசரவாக்கம் ஆகிய நகராட்சிகள், பெருங்குடி, போரூர், சின்னசேக்காடு, புழல், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பேரூராட்சிகள், இடையஞ்சாவடி, சடையம்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தாகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய பஞ்சாயத்துக்கள் சென்னையுடன் இணைகின்றன.
தற்போது உள்ள 155 வார்டுகள் என்பது இனி 200 ஆக அதிகரிக்கவுள்ளது. புதிதாக சேரும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ. 3,857 கோடி மதிப்பீட்டில் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சியில் ஒப்புதல் பெறுவதற்காக கடந்த மாதம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் வார்டு எல்லைகள் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக தெரிவித்த பிறகே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி எல்லை விரிவாக்க மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
அந்த மசோதாவில்,
சென்னை மாநகரை அடுத்துள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை சேர்ப்பதன் மூலம் சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவுபடுத்துவதென அரசு முடிவு செய்துள்ளது.
மேற்சொன்னவாறு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ப்பதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு நடத்தப்பட உள்ள அடுத்த வழக்கமான தேர்தலுக்காக வார்டுகள் சீரமைக்கப்படும்.
இந்த விரிவாக்கத்தின் பொருட்டு சென்னை மாநகராட்சிக்கான வார்டுகளின் மொத்த எண்ணிக்கையை 200 ஆக நிர்ணயிப்பதென முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் வார்டுகளின் எண்ணிக்கையை கூட்டுகிற வகையில் அமைந்த ஒரு சில வகை முறைகள் திருத்தப்படுவது தேவையானதாகிறது.
எனவே அரசானது 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தை மேற்கொள்ள நோக்கத்துக் காக திருத்துவதென முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் 2010-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி திருத்த அவசர சட்டமானது 2010 டிசம்பர் 20-ந்தேதியன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு டிசம் பர் 21-ந்தேதி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன அவசர சட்டத்துக்கு பதிலாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன் இந்த மசோதாவை அதிமுக எதிர்ப்பதாக அக்கட்சியின் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications