மேல் விஷாரத்தில் கிணற்றில் மிதந்த இரு சிறுமிகள்-தந்தையே கொன்ற கொடுமை
வேலூர்: வேலூர் மாவட்டம் மேல் விஷாரத்தில் இரு சிறுமிகள் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிரடித் திருப்பமாக அவர்களை பெற்ற தந்தையே கொன்றது தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேல் விஷாரத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி. சென்னையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மும்தாஜ். கணவர் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில், மும்தாஜுக்கும், அவரது கொழுந்தனார் பாபு முகம்மது என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இது முகம்மது அலிக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். மேலும், தனக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் தந்தை தானா அல்லது பாபுவா என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.
ஊரிலும் தனது மனைவியின் கள்ளக்காதல் வெளியாகி எல்லோரும் பேச ஆரம்பித்ததால் வேதனை அடைந்த அவர் இரு குழந்தைகளையும் கொல்லத் திட்டமிட்டார்.
இதையடுத்து இரு குழந்தைகளையும் ஊருக்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டார்.
இந்த நிலையில் கிணற்றில் மிதந்த இரு குழந்தைகளையும் மீட்ட போலீஸார் அவர்களை யாரோ கடத்திச் சென்று கிணற்றில் போட்டிருக்கலாம் என முதலில் சந்தேகித்தனர். ஆனால் விசாரணையின்போது அவர்களுக்கு மும்தாஜ் விவகாரம் தெரிய வந்தது. இதையடுத்து முகம்மது அலி மீது சந்தேகம் திரும்பியது. அவரை விசாரித்தபோது உண்மையைக் கக்கி விட்டார்.
இதையடுத்து பெற்ற மகள்களைக் கொன்ற முகம்மது அலியை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications