ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பை இடித்துத் தள்ள சுற்றுச்சூழல் துறை உத்தரவு

கார்கில் போர் வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தெற்கு மும்பையில் உள்ள கொலபாவில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
முதலில் 6 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அனைத்து விதிகளையும் மீறி 31 தளங்களைக் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்தக் குடியிருப்பில் 104 வீடுகள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவாணின் மாமியார், மைத்துனி, மைத்துனருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அவரது முதல்வர் பதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பறித்தார்.
அதே போல முன்னாள் ராணுவ தலைமைத் தளபதிகள் தீபக் கபூர், என்.சி. விஜ், முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி மாதவேந்திர சிங் ஆகியோரும் இதில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கிக் கொண்டனர்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதே போல பாதுகாப்பு அமைச்சகமும் தனிப்பட்ட முறையில் விசாரணையைத் தொடங்கியது.
மேலும் கொலபாவில் கடற்படை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் இந்தக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதால் இது குறித்து கடற்படையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந் நிலையில் இந்தக் குடியிருப்பு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறையும் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் விதிகள் மீறப்பட்டது உறுதியானால், 31 மாடிகளையும் இடிக்கவும் உத்தரவிடத் தயங்க மாட்டேன் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று ஜெய்ராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறி ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது விசாரணையில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்தக் கட்டடத்தைக் கட்ட சுற்றுச்சூழல் துறையின் அடிப்படை அனுமதியைக் கூட பெறவில்லை.
எங்களுக்கு இந்த சட்டம் தெரியாது என்று கூறி யாரும் தப்பிவிட முடியாது.
இதனால் இந்தக் கட்டடமே சட்ட விரோதமானது. அதை 3 மாதங்களுக்கு இடிக்க வேண்டும். ஆதர்ஷ் குடியிருப்பு சங்கமே அதை இடிக்காவிட்டால், அதை மகாராஷ்டிர அரசு இடித்துத் தள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு சங்கம் மனு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications